‘விரிந்த உலகினில் உள்ள உலகோர் யாவரும் வழிபடற் குரிய
கடவுள் எந்நாளும் திருப்பாற் கடலில் தோன்றிய விடத்தை அமுதாகக்
கொண்டருளிய மேரு மலையை வில்லாக உடைய முதல்வனே என்று யாவர்
இதனைத் தெளிவு பெற உணராதார்’ என்று பலரும் புகழ் ததீசி முனிவரர்
கூறினர். அதனைக் கேட்டு, ததீசிமுனிவர் சபித்தல்
அவைக்களத் துறையும் பார்ப்பார் தருபொருட் காசை கூர்ந்து கவர்த்தபுல் லறிவின் மான்று கடுந்தொழில் தக்கன் கூற்றே நிவப்புறப் புகற லோடும் நெடுந்தகை மறுவில் காட்சித் தவத்திறல் ததீசி சீறி விப்பிரர் தம்மை நோக்கி. 21 |
இச்சபையின்கண் உள்ள பார்ப்பனர்கள் தக்கன் தருகிற பொருளிற்கு
ஆசையுற்று இரண்டு பட்ட புல்லிய அறிவினால் மயங்கிக்கொடுஞ்
செயலையுடைய தக்கன் சொல்லையே மேன்மையவாகக் கூறிய அளவிலே
பெருந் தகையாகிய குற்றமற்ற அறிவினையும், தவவலிமையையும் உடைய
ததீசி சினந்து பிராமணர்களைப் பார்த்து,
படுபொருள் வெஃகு நீராற் பார்ப்பனக் கடையர் காள்நீர் நடுவிகந் துரைத்த வாற்றான் நடலைகூர் ஒழுக்கம் பூண்டு கெடுநெறி பற்றிச் சைவ நிந்தையிற் கிளர்ச்சி கொண்டு கொடுமுகக் கலியில் தோன்றிக் கலாய்த்தனீர் இடும்பை கூர்ந்து 22 |
பார்ப்பனக் கீழ் மக்களே, கிடைக்கின்ற பொருள் விரும்பிய தன்மையால்
நீவிர் நடுவு நிலைபிறழ்ந்து கூறிய முறையால் வஞ்சித்தல் மிகுகின்ற நடையை
மேற்கொண்டு தீயவழியைப் பின்பற்றிச் சிவநிந்தையில் எழுச்சி கொண்டு
கொடுமைக் கிடனாகிய கலியுகத்தில் தோன்றிப் பிணங்கித் துன்பம் மிகுந்து,’
வைதிகப் புறத்த ராகிச் சைவநூல் வழியைக் கைவிட் டுய்தியில் புறநூல் பற்றி உலப்பரு மறையின் நிந்தை ஐதெனப் புகன்று வேற்று மொழியினை யாத ரித்துப் பொய்திகழ் நரகின் உய்க்கும் புண்டரம் பொலியக் கொண்டு, 23 |
வேத சிவாகம நெறியைக் கைவிட்டுப் பிழைக்கலாகாத புறச்சமய
நூல்களைப் பிரமாணமாகக்கொண்டு பிரபலசுருதியாகிய வேதநிந்தனையை
நன்றென்று விரும்பி அந்நிய பாஷைகளைப் பாராட்டி வஞ்சிக்கும் நரகிடைச்
செலுத்தும் ஊர்த்துவ புண்டர முதலியவற்றை விளங்கப்பூண்டு.