தக்கேசப் படலம் 373


     ‘வேதம் பொது நூலாய் ஆகமம் சிறப்பு நூலாய்ப் பயிற்சியும்,
ஒழுகலாறும் உடையன ஒருவி என்றனர். வயிறு வளர்த்தலைக்
குறிக்கோளாகக் கொள்ளுதல் புறநூல் பற்றி வேற்றுமொழியை வளர்த்து,
நரகிடைப் புகாது காத்து முத்தியை அளிக்கவல்லது திருநீறு அதனை
இழப்பிக்கும் ஏனைய குறிகளை நரகின் உய்க்கும் என்றனர்.

எண்டிகழ் மறைஈ றெல்லாம் இயம்பும்வெண் ணீற்று மும்மைப்
புண்டரம் அக்க மாலை சிவலிங்க பூசை தம்மின்
விண்டிடா வயிரங் கொண்டு திகிரியால் வெந்த புண்ணைத்
தண்டுசங் காழி கஞ்சக் குறிகளைத் தனுவில் தாங்கி.         24

     ‘மிக்கோர் அறிவில் விளங்கும் வேதாந்தங்கள் போற்றும்
திருவெண்ணீற்றினா லமைந்த திரிபுண்டரமும், உருத்திராக்க வடமும்,
சிவலிங்கப் பூசனையும், ஆகிய இவற்றில் மனக்காழ்ப்பினை அடைந்து
திருமாலின் சங்கு சக்கர வடிவில் வெந்த புண்ணினையும், தண்டு, சங்கு,
சக்கரம், தாமரைமலர் இவற்றின் வடிவுபட எழுதுதலையும் உடம்பில் தாங்கி,’

அந்தணர் தமக்குத் தேவாம் அரனடி தழாது தோளின்
வந்தவர் தமக்குத் தேவாம் மாயனைத் தழுவிப் பேணி
நிந்தனைக்குரிய ராகி நிலமிசைத் திரிக வாளா
நொந்துநீர் தழுவும் மாலும் நுங்களுக் கருள்செய் யானால்.   25

     ‘அந்தணர் தமக்குத் தெய்வமாகும் அரன் திருவடிகளை மனத்துட்
கொள்ளாது தோளிற் பிறந்தவராகிய க்ஷத்திரியருக்குத் தெய்வமாம்
திருமாலை மனங்கொண்டு போற்றிப் பழிப்பிற் குரியராகிப் பிறப் பிறப்பிற்
பட்டுழல்வீர்களாக. வறிதே வருந்தி நீவிர் சூழும் திருமாலும் நுங்களுக்கருள்
செய்யாது கைவிடுக?’

என்னவெங் கொடிய சாபம் இயம்பினான் சிதம்புத் தக்கன்
றன்னைமுன் செயிர்த்து நோக்கிச் சாற்றுவான் அச்ச மின்றிப்
பொன்னவிர் சடிலத் தேவை இகழ்ந்தனை பொறிஇ லாதாய்
நின்னுடைக் குலத்துக் கின்னே முடிபென நினைவிற் கோடி.   26

     என்று மிகக் கொடிய சாபத்தைக் கூறினர். கீழ்மைக் குணமுடைய
தக்கனைச் சீறிப்பார்த்துக் கூறுவார்; அறிவிலீ! அச்சமின்றிப் பொன்போல
விளங்குகின்ற சடையுடைப் பெருமானை இகழ்ந்தனை ஆகலின், நின்னுடைய
குலம் இப்பொழுதே முடிந்ததென நினைவிற் கொள்ளுதி.’

வழிபடற் குரியார் தம்மை வழிபடல் மறுத்து மற்றை
வழிபடற் குரிய ரல்லார் தமைவழி படுவோ ராகி
வழீஇனார் தமக்குத் தெய்வம் வகுத்திடுங் கொடிய தண்டம்
வழியினால் இன்னே எய்தும் என்பது வழக்காம் மன்னோ.    27