374காஞ்சிப் புராணம்


     வழிபாட்டிற்குரிய சிவபெருமானை வழிபாடு செய்யாது வழிபடற் குரிய
ரல்லராகிய மற்றைத் தேவர்களை வழிபாடு செய்வோராகி நன்னெறிக்கண்
நின்றும் தவறிய அந்தணர்களாகிய நுமக்குவகுக்கப்பெறும் கொடிய தண்டனை
நெறியினால் இப்பொழுதே நேரும் என்பது மரபாம்,’

என்றனன் ததீசிச் செம்மல் எழுந்துதன் இருக்கை புக்கான்
அன்றது நோக்கிப் பூமேல் ஆண்டகை அச்சம் எய்தித்
துன்றிய குழுவின் நீங்கிச் சுடர்மழுப் படையான் பாங்கர்ச்
சென்றனன் சென்ற பின்னர்ச் சிறுவிதி எழுந்து நின்று.    28

     என்று கூறித் ததீசி முனிவர் எழுந்து தனது ஆசிரமம் சேர்ந்தனர்.
அந்நாள் அந்நிகழ்ச்சியைக் கண்டு பிரமன் அச்சமுற்றுச் செறிந்த தேவர்
குழாத்தின் நீங்கிப் பரசு பாணியராகிய சிவபிரானார் இருக்கையை எய்தினன்.
எய்திய பின் தக்கன் எழுந்து நின்று,

வீரபத்திரர் தோற்றம்

எச்சனாம் துளவி னானை அடைக்கலம் என்று போற்றி
அச்சுதன் அருளால் வேள்வி தொடங்கலும் அனைய தெல்லாம்
முச்சகம் புகழும் நல்யாழ் முனிவரன் மொழியக் கேளாப்
பச்சிளங் கொடியி னன்னாள் பரம்பொருட் கிதனைக் கூறும்.  29

     யாக வடிவினராம் திருமாலைப் புகலடைந்து போற்றி அவரருளால்
யாகத்தைத் தொடங்கலும், அங்குள்ள நிகழ்ச்சிகள் யாவும் மூவுலகும் புகழும்
நல்ல யாழினையுடைய நாரதர் கூறப் பசிய இளங்கொடியை ஒத்த அம்மையார்
கேட்டுத் தலைவருக்குக் கூறுவார்.

இறைவனே எனக்கு முன்னர்த் தாதைஎன் றிருந்த தக்கப்
பொறிஇலி நமக்குத் தீங்கே நாள்தொறும் புரியுந் தீயோன்
மறைநெறி வேள்விச் செந்தீ வளர்க்குமால் அதனை இன்னே
குறைபடச் சிதைத்தி நின்பாற் கொளத்தகும் வரம்ஈ தென்றான்.  30

     ‘இறைவனே!  முன்னாள் எனக்குத் தந்தை என இரந்த அறிவிலியாகிய
தக்கன் நமக்கு நாடொறுந் தீங்கினையே புரியும் கொடியோனாய் வேதத்துட்
கூறப்படும் வேள்வியிற் செந்தீயை வளர்க்கும். அவ்வேள்வியை இப்பொழுதே
குற்றப்படச் சிதைவு செய்வீராக. நும்மிடத்துக் கொள்ளற் குரிய வரம்
இதுவேயாகும்’ என்றனர்.

இருள்குடி யிருந்த கூந்தல் இறைவிதன் மாற்றங் கேளாத்
தெருள்குடி யிருந்த சிந்தை தைவரச் சிவந்த நோன்தாள்
அருள்குடி யிருந்த பெம்மான் அழிதகைத் தக்கன் நெஞ்சின்
வெருள்குடி யிருத்து மொய்ம்பின் வீரபத் திரனைத் தந்தான்.   31