இருள் குடிகொண்ட கூந்தலையுடைய உமையம்மையார் தம் திருவாக்கைத் திருச்செவியேற்று மெய்யறிவு நிலைபெற்ற உள்ளம் வருடச் சிவந்த வலியமைந்த திருவடியையும் அருள் நீங்காது நிலைபெறுதலையும் உடைய பெருமான் அழிதற்குரிய தகுதி வாய்ந்த தக்கனுடைய மனத்தில் அச்சத்தை நிலைபெறுத்தும் வன்மையை யுடைய வீரபத்திரரைத் தோற்றுவித்தனர். திருவடி சிவத்தல்: ‘‘தணிவொன்று மனமுடையார் புகழ் தீண்டச் சிவந்த பிரான்’’ (திருமாற்பேற்றுப்படலம் 15) ‘‘செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கமலக் கரத்தால், வருடச் சிவப்பன மாற்பேருடையான் மலரடியே’’ (திருநா. திருமாற்பேறு.) எண்ணரும் உலகம் ஈன்ற சிற்றகட் டெம்பி ராட்டி வண்ணவார் புருவம் மீப்போய் நெரிப்பவாய் துடிப்பப் பொங்கிக் கண்ணறு சினம்மீக் கொண்டு பத்திர காளி யென்னும் பெண்ணணங் கரசை ஈன்றாள் பிறங்கெரி சிதறுங் கண்ணாள். 32 | அளவிடலரிய உலகங்களை ஈன்ற சிறிய வயிற்றினையுடைய எமது பெருமாட்டி அழகிய நீண்ட புருவம் மேலேறி நெளியவும் அதரங்கள் புடை துடிப்பவும் மிக்குக் கண்ணோட்டத்தை அழிக்கின்ற கோபம் மிக்குப் பத்திரகாளி என்னும் பெண்கள் தலைவியை விளங்குகின்ற எரியைச் சிந்தும் கண்ணினராய் அம்மையார் ஈன்றனர். பத்திர காளி வீர பத்திரன் இருவர் தாமும் அத்தனை உமையைப் போற்றிப் பணிஎமக் கருளிர் என்ன முத்தலைச் சூலத் தண்ணல் மொய்ம்பனை அருளின் நோக்கி இத்திரு மடந்தை யோடும் இறைப்பொழுது தின்கட் போந்து. 33 | பத்திரகாளி வீரபத்திரர் ஆகிய இருவரும் அம்மையப்பர் தம் அடியிணைகளைப் பணிந்து ‘பணி எமக்கருள் செய்வீர்’ என்று வேண்ட மூவிலைச் சூலத்தினையுடைய பெருமானார் வீரரை அருளொடும் நோக்கி இக்காளிதேவியொடும் விரைந்துபோய், ‘விரைந்து என்னும் பொருளில் இறைப் (சிறிது) பொழுதில் என்றருளினர். பழித்தொழில் தக்கன் வேள்வி பாழ்படுத் துமையாள் சீற்றம் ஒழித்திஎன் றருளிச் செய்தான் ஒள்ளிழை உமையும் அவ்வா றழித்துநீர் வருதிர் என்று விடைகொடுத் தருளப் பெற்றுத் தெழித்தனர் எழுந்தார் சென்றார் இருவருஞ் சீற்றம் பொங்க. 34 | ‘இழி தொழிலையுடைய தக்கன் வேள்வியை அழித்து அம்மையின் சினத்தை ஒழிப்பாய்’ என்றருளினர். விளங்குகின்ற அணிகளைப் பூண்ட உமாதேவியாரும் ‘அவ்வாறே நீவிர் அழித்துப்பின் வருவீர்’ என்று விடையளிப்பச் சினக்குறிப்புடன் பேரொலி எழுப்பி இருவரும் கோபம் மீக்கொள்ளப் புறப்பட்டுச் சென்றனர். |