எழுசீரடி யாசிரிய விருத்தம் சண்ட வாயு மந்த மாக வடவை அங்கி தண்ணெனச் சண்ட பானு மதியம் ஒப்ப மொய்த யங்கு தென்திசைச் சண்டன் வீறு சாந்தம் எய்த வெஞ்சி னந்த லைக்கொளீ இச் சண்டி கைத்த லைவி யோடு தலைவன் அங்கண் எய்தினான். 35 | பெருங் காற்றுப் பிற்பட முற்பட்டு வட வானலம் குளிர்ந்துகாட்ட வெப்பங்கொண்டு நீறாக்கும் சண்ட சூரியன் சந்திரனை ஒப்புற வலிமை விளங்கு தென் திசை இயமன் செருக்கும் சாந்தமாகக் கொடிய கோபம் முதிர்ந்து போர் குறித்துச் சென்ற அணங்குகளின் தலைவியாகிய காளியொடும் வீரபத்திரர் தக்கன் வேள்விச் சாலையை எய்தினர். யுகாந்தக் காற்று முதலியன. சண்டம்-கொடுமை; விரைவு; பெருமை. தன்னை நேர்உ ரோம சப்பெ யர்க்க ணந்த வப்படைத் தன்ன வெங்க ணங்கள் தம்மை வேள்வி யாற்று சாலையின் வெந்நெ ருப்பு வைப்ப ஏவி உட்பு குந்து மேவலாப் புன்னெ றிச்செஃ றக்கன் ஆவி பொன்றுமா துணித்தனன். 36 | தன்னையே ஒத்த உரோமசப் பெயர் பூண்ட சிவகணத்தை மிகுதியாகத் தோற்றுவித்து அக்கணத்தை வேள்வியைச் செய்கின்ற சாலையின் கண் பெரு நெருப்பிட ஏவித் தாம் உள்ளே புகுந்து விரும்பத் தகாத புல்லிய வழியிற் செல்லா நின்ற தக்கன் உயிர் கெடுமாறு அவன் தலையைத் துணித்தனர். உழைஉ ருக்கொ டோடும் வேள்வி உயிர்செ குத்த ருக்கர்தம் விழிகள் மற்றை முப்ப திற்றி ரண்டு பல்லும் வீழ்த்தினான் வழுவும் இந்து வைச்சி னந்து தேய்த்து வன்னி நாவினோ டெழுக ரந்து ணித்து மற்றும் ஏற்ற தண்டம் ஆற்றுவான். 37 | மான் வடிவு கொண்டோடியயாக யாக தெய்வத்தின் உயிரைப் போக்கியும் பன்னிரு சூரியர்களின் கண்களைப் பறித்தும் பற்கள் முப்பதிரண்டினையும் தகர்த்தும் தப்பிய சந்திரனை வெகுண்டு காலரற் றேய்த்தும் அக்கினியின் ஏழு நாவையும் கையையும் துணித்தும் மேலும் இயைந்த தண்டங்களையும் செய்தனர். திருவாசக உந்தியாருட் பல ஒறுப்புக்களும், தக்க யாகப் பரணியிலும் காண்க. கண்ணைப் பறித்தமை: ‘‘சீரருக்கன் குருட்டிற் புகச்செற்ற கோன்’’ (திருக்கோ. 270) குலவு வாணி தன்னி டத்து வீங்கு கொங்கை மூக்கரிந் துலகம் ஈன்ற அன்னை உம்பர் பெண்டிருக்கும் உதுபுரிந் திலகும் ஏனை விண்ண வர்க்கும் முனிவ ருக்கும் எண்டிசைத் தலைவ ருக்கும் வீரன் அன்று தக்க தண்டம் ஆற்றினான். 38 | |