|      உலகீன்ற அன்னையின் கூற்றில் வந்தகாளி, விளங்குகின்ற சரசுவதியின்    கொங்கையையும், மூக்கையும் அரிந்து தேவமாதர் ஏனையோர்க்கும்
 அத்தண்டத்தைப் புரிய விளங்கும் தேவர்க்கும் முனிவரர்க்கும், எண்டிசைத்
 தலைவராகிய இந்திரன் முதலானோர்க்கும் வீரபத்திரர் அன்று தக்க
 தண்டங்களைப் புரிந்தனர்.
 		| தடங்கொள் சாலை முற்றும் வெந்த ழற்க ளித்தி யூபமும் பிடுங்கி வேள்வி யாற்றி னோர்பெ ருங்க ழுத்தை நாணினால்
 மடங்க யாத்து வேள்வி யங்கம் மற்றவும் எடுத் தெடுத்
 திடங்கொள் கங்கை யூட ழுத்தி யிட்ட வன்க ணங்களே.    	           39
 |       இடங்கொண்ட சாலை முற்றவும் நெருப்பிற்கு இரையூட்டி வேள்வித்     தூணையும் பறித்து யாக புரோகிதர்களின் கழுத்தைத் தருப்பைக் கயிற்றினால்
 சிக்கப் பிணித்து வேள்விக்குரிய உபகரணங்கள் எவற்றையும் பரவிய
 கங்கையில் எறிந்தனர் கணநாதர்.
 		| இன்ன வண்ணம் வேள்வி முற்றும் இற்ற வாறு காண்டலும் பொன்னு டைத்து ழாயி னான்பொ றாதுளம் புழுங்கினான்
 முன்னர் வெள்கி மானம் உந்த மொய்ப றப்பை யேறெனப்
 பன்னும் ஊர்தி மேல்இ வர்ந்து படைஎ டுத்தெ திர்ந்தனன்.   40
 |       இவ்வாறு வேள்வியை அழித்த வகையைக் கண்டு பீதாம்பரத்தையும்    துழாய் மாலையையும் அணிந்த திருமால் உள்ளம் உடைந்து புழுக்கம்
 எய்திப் பின்பு நாணமுற்று மானம் செலுத்த வலியுடைய புள்ளரசு எனப்
 பேசப்பெறும் வாகனமேற்கொண் டூர்ந்து பொருது எதிரேற்றனன்.
 		| ஆய காலை அண்ணல் ஆணை யாற்றின் நான்மு கப்பிரான் மேய வையம் முன்னர் உய்ப்ப ஏறி வீர வள்ளலும்
 மாய னோடெ திர்த்து வெம்ப டைக்க லம்வ ழங்கினான்
 ஏய அங்கண் மூண்ட பூசல் யாவர் சொல்ல வல்லரே.     	           41
 |       அப்பொழுது வீரபத்திரர் ஏவலால் நான்முகன் பொருந்திய தேரினை    முன் செலுத்த வீரபத்திரரும் ஏறி யிருந்து திருமாலோ டெதிர் நின்று
 கொடிய படைகளைத் தூண்டினார். அவ்விடத்து முதிர்ந்த போரினை யாவர்
 சொல்ல வல்லராவர்.
 		| வெற்றி தோல்வி இன்றி நின்று வெஞ்செ ருப்பு ரிவுழிச் செற்றம் மிக்கு மாயன் வெய்ய திகிரி யைச்செ லுத்தினான்
 மற்றும் வீர பத்தி ரன்றன் மார்பின் முண்ட மாலையுள்
 ஒற்றை வெண்க பாலம் அப்ப டைக்க லத்தை உண்டதால்.   42
 |       வெற்றி தோல்வி காணாத வகையில் நிலைத்துக் கொடிய போரைப்    புரிகையில், திருமால் கோப மிகுந்து கொடிய சக்கராயுதத்தை ஏவினார்.
 வீரபத்திரர் மார்பில் விளங்குகின்ற சிரமாலையுள் பிரம கபாலம் ஒன்றதனை
 விழுகியது.
 |