378காஞ்சிப் புராணம்


அறுசீரடி யாசிரிய விருத்தம்

உணங்கரும் வலத்த ஆழி உணங்கிய தோர்ந்து மாற்றார்க்
கணங்குசூழ் கணங்கள் அண்டம் வெடிபட முழங்கி ஆர்த்துத்
துணங்கையாட் டயரும் ஓதை துஞ்சினார் ஒழிய நின்ற
கணங்கெழு சுரர்கள் கேளாக் கலங்கிஓட் டெடுக்கும் ஏல்வை.  43

     கெடலரிய வெற்றியையுடைய ஆழி கெட்டதறிந்து பகைவர்க்குத்
துன்பத்தைச் செய்கின்ற கணங்கள் அண்டமுகடு பிளவு படப் பேரொலி
செய்து ஆரவாரித்துக் கூத்தியற்றும் ஓசையை இறந்தோர் ஒழிய எஞ்சி
யிருந்த தேவர் குழாம் செவி ஏற்றுக் கலங்கிப் புறங்கொடுத்தோடும் பொழுது,

காண்டகு வீரச் செம்மல் கணங்களான் வளைத்துத் தாளின்
மாண்டகு நிகள யாப்பு வலித்தலும் புரவி மான்தேர்
தூண்டிய எகினப் பாகன் துணையடி தொழுதி ரந்து
வேண்டினன் அடிகேள் சீற்றம் விடுத்தருள் இனிஎன் றேத்தி.   44

     மதிக்கத்தக்க வீரபத்திரர் கணங்களைக் கொண்டு அகப்படுத்துக்
கால்களில் வலிமை அமைந்த விலங்குத் தலையை இறுக்குதலும் சாரதியாய்
நின்ற அன்னத்தை வாகனமாகவுடைய பிரமன் திருவடிகளில் வணங்கித்
துதித்து ‘அடிகேள்! வெகுளியை விடுத்து அருள் செய்மின்’
எனக்குறையிரந்தனன்.

பெருமான் எழுந்தருளுதல்

மாதர்வெண் கமலத் தோன்றல் விண்ணப்பஞ் செவிம டுத்து
மேதகைக் கணங்க ளோடும் வெகுளியை விடுத்து நம்மான்
பாததா மரைக்கீழ்ச் சிந்தை பதித்தனன் பதித்த லோடும்
பூதர மகளுந் தானும் ஆயிடைப் போந்தான் அண்ணல்.     45

     அழகிய வெண்டாமரை மலருறை பிரமன் வேண்டுகோளைத் திருச்
செவி சாத்தி மேன்மை பொருந்திய கணங்களுடன் வெகுளியைத் தவிர்த்துச்
சிவபிரான் திருவடி மலர்களில் சிந்தையை வைத்த அளவில் மலையரையன்
மகளாருடன் பெருமானார் அங்கெழுந்தருளினர்.

     பிரமன் வெண்டாமரை மலரிலிருத்தல்; ‘சாம வெண்டாமரை
மேலயனும்’ (திருஞா. திருவக்கரை.) ‘‘வெண்மலரான் பாற்கடலான்’’ (திருவா.
திருத்தசாங்கம்)

குடமுழா பதலை தக்கை கொக்கரை பணவம் கோதை
படகம்ஆ குளித டாரி தகுணிச்சம் பம்பை மொந்தை
துடிபணை திமிலை கண்டை தொண்டகம் பேரி கல்ல
வடமுதல் இயங்கள் எல்லாம் வயின்தொறும் இயம்பி மல்க.   46