தக்கேசப் படலம் 379


     பதலை, கோதை, மொந்தை ஒருகட் பறைகள். தக்கை, தடாரி பம்பை
விசேடங்கள். கொக்கரை-சங்கு, பணவம்-தம்பட்டம். படகம்-போர்ப்பறை.
ஆகுளி-சிறுபறை. தகுணிச்சம்-ஒரு வகைத்தோற்கருவி, துடி-உடுக்கை.
திமிலை-பம்பைமேளம். கண்டை-பெருமணி, தொண்டகம்-ஆகோட்பறை.
கல்லவடம்-வாச்சிய விசேடம். இயம்-வாச்சியம், பணை-ஓர் வகை முரசு;
துணைக்கருவியும் ஆம்.

வளைவயிர் பணிலம் சின்னம் வங்கியம் தாரை காளம்
கிளைபடு நரம்பு விணை தீங்குழல் மிடற்றுக் கீதம்
உளஎனைப் பிறவுங் காலும் துவைப்பொலி உறந்து விம்மி
அளவலின் உலகம் எல்லாம் இசைமய மாகித் தேங்க.     47

     வளைந்த ஊது கொம்பும், சங்கும், திருச்சின்னமும், இசைக்குழலும்,
தாரையும், சிறு சின்னமும், கிணை என்னும் நரம்பு பொருந்திய வீணையும்,
இன்னிசைப் புல்லங்குழலும், வாய்ப்பாட்டும், உள்ளனவாகிய பிறவும்
வெளிவிடுகின்ற ஒலிக்கின்ற ஒலி நெருங்கி மிகுத்துக் கலத்தலின்
விண்ணிடமும், மண்ணிடமும் இசை மயமாகி நிறைவு பெறவும்,

வாலொளிக் கவிகை பிச்சம் சாமரை மணிப்பூண் தொங்கல்
ஆலவட் டங்கள் மற்றும் விடைக்கொடி அருகு செல்லக்
காலனைச் செகுத்த வாறும் முப்புரங் காய்ந்த வாறும்
போல்வன உலகந் தேறப் பூதர்கள் விருது பாட.           48

     வெள்ளொளியை விரிக்கின்ற முத்துக்குடையும், பீலிக்குடையும்,
வெண் கவரியும், மணிகளிழைக்கப் பெற்ற பிடியுடைய மயில் தோகையும்,
சிற்றால வட்டமும் பேரால வட்டமும் (விசிறிகள்), விடை எழுதிய கொடியும்
உடன் போதவும், இயமனை உதைத்த முறைமையையும், திரிபுரங்களைச்
சிரித்தெரித்த முறைமையையும், இவை போல்வனவும் ஆகிய பிற
சேவகங்களையும், உலகோர் அறிந்துய்யப் பூதகணங்கள் புகழ்ந்துபாடவும்,

ஏற்றுருக் கொண்டு தன்போல் இணையடி தாங்கப் பெற்று
மாற்றல னாகித் தன்நேர் தருக்கிய மாயோன் செய்ய
காற்றலைப் பிணிப்புக் காணுங் களிப்பினான் மேல்கொண் டுய்க்கும்
ஆற்றல்சால் அறவெள் ளேறு பரந்துசெண் டாடிச் செல்ல.   49

     இடப வடிவு கொண்டு தன்னைப் போலச் சிவபெருமான் திருவடிகளைத்
தாங்கும் பேறுவாய்த்தமையால் தொழிலாற் பகைவனாகித் தனக்கு ஒப்பெனச்
செருக்கிய திருமாலினுடைய கால்களில் விலங்கைக் காண வேண்டும் என்னும்
மகிழ்ச்சியினால் சிவபிரானார் மேற்கொள்ளக் கொண்டூரும் வலிமை அமைந்த
வெள்ளிய தரும விடை பரவிச்செண்டாடிச் செல்லவும்,

     யானை, குதிரை இவற்றின் மீதிருந்து செண்டாடுவர், அவ்விடம் செண்டு
வெளி எனவும், அவ்வாடலைச் செண்டாடல் எனவும், ஆட்டத்திற்கேற்ப
அவற்றின் அடியிடலைச் செண்டாடல் எனவும் கூறுவர். கந்துகம்-
குதிரையையும், பந்தையும் குறித்தலும் காண்க.