கல்வியில் வல்லோர் புனைந்து கூறும் வளமை முற்றும் அமைந்து வடபாலுள்ள மேருவைச் சூழ்ந்த பொன்னிறம் வாய்ந்த நாவலந் தீவோ என்று கண்டோர் வியந்து கூற, வளருஞ் செந்நெற்கதிரை யரியும் பருவத்தை ஆராய்ந்து, தெள்ளிய நீர்சூழ்ந்த திருநாவலூராளியாகிய ஆளுடைய நம்பிகள் மனங் களிகூர நெல்லளந்த குண்டையூர்க் கிழாரைப் போன்ற, மருதநில மக்களெல்லாரும் ‘நாவலோ’ என்று அழைக்க விரும்பியடைந்து தத்தமக்குரிய நெல்லரி தொழிலில் முயல்வாராயினார். ‘நாவலோ’ என்பது நெல்லரிதற்கு மருதநில மக்களை அழைக்கும் குறியீடு. இது குழூஉக்குறி. கலிவிருத்தம் ஒருவ ருக்கொரு செல்லல்உற் றாலஃ தருகு ளார்க்கும் அடுப்பது திண்ணமே கருவி மள்ளர் கதிர்க்குலை தன்னொடும் பருமென் பூக்களும் பற்றி அரிகுவார். 102 | உழவர்கள் அரிவாளால் கதிர் முற்றிய குலைகளொடும் பரிய மெல்லிய மலர்களையும் பற்றி அரிவார். ஒருவர்க்கொரு துன்பம் வரின் அவரோடு கூடியிருப்பார்க்கும் அத்துன்பம் வருவது உறுதி என்பது அறிய நேர்ந்தது. அரிவர் சேர்ப்பர் அடுக்குவர் சிக்கென வரிவர் சென்னியில் வைப்பர் களஞ்செலப் புரிவர் பொன்னங் கிரியெனப் போர்செய்வர் பிரிவர் மீள்வரிப் பெற்றியர் எங்கணும். 103 | நெற்கதிரைத் தாளுடன் அரிவர்; ஓரிடத்திற் சேர்ப்பர்; மேன் மேலடுக்குவர்; விரையக் கட்டுவர்; தலைமேற்சுமந்து செல்வர்; களத்திற்குக் கொண்டு போவர்; மேருமலை என்னப் போர் செய்வர்; அவ்விடத்தினின்றும் பிரிவர்; மீண்டு வருவர்; இவ்வியல்பினரே எவ்விடத்தும் உள்ளனர். மடிந்திருப்போர் இலர். சிறைசெய் தீம்புனல் நாட்டிறை செற்றுமுன் சிறைய ரிந்த வரைகளைச் சீற்றத்தால் சிறைசெ யக்கரு தித்தன் நிலத்தொரு சிறைவைத் தாலெனப் போர்கள் சிறக்குமால். 104 | இனிய நீரைச் சிறை செய்த மருத நிலத்திறைவனாகிய இந்திரன் வெகுண்டு முன்பு சிறகுகளை அரிந்த மலைகளைக் கோபத்தால் சிறைப்படுத்தக் கருதித் தன்னிலத்தில் ஒரு பக்கத்தில் வைத்தாற்போல நெற்போர்கள் சிறந்து விளங்கும். மலைகளுக்குச் சிறகுகள் இருந்தன என்றும் அவற்றை இந்திரன் தடிந்தான் என்றும் புராணங்கள் கூறும். |