380காஞ்சிப் புராணம்


வெள்ளநீர்க் கிடையோன் வைத்த விழிஅவன் எவ்வம் காண
வெள்கியாங் கடியிற் சாத்தும் விரைமலர்க் குவையுள் மூழ்க
வெள்ளெலும் பணிகள் தங்கள் இனத்தவர் மெலிவு நோக்கி
உள்ளுடைந் தழுவ தேய்ப்ப ஒன்றொடொன் றலம்பி ஆட.    50

     திருப்பாற் கடலிற் பள்ளி கொள்பவராகிய மாயவனார் மலராக
இட்ட கண், தன்னை உடையவர்க்கு நேர்ந்த துன்பத்தைக் காண நாணங்
கொண்டாற் போலப் பெருமானார் திருவடிகளிற் சாத்தப் பெற்ற மணமுடைய
மலர்க்குவியலில் மறையவும், திருமால் பிரமர்தம் முழு வெள்ளெலும்புகள்
தம் இனத்தவராகிய திருமால் பிரமர்தம் வருத்தத்தைப் பார்த்து மனமுடைந்து
அழுதலைப் போல ஒன்றோடொன்று மோதுதலை ஒலித்து அசையவும்.

     அலம்புதல்-வருந்துதல், ஒலித்தல் இருபொருளும் கொள்க.

புன்னெறித் தலைநின் றெங்கோன் றனைஇகழ்ந் திடும்பை பூண்ட
இன்னரை எனக்கூணாக அளித்திடும் இறைவன் என்னா
மன்னுபே ருவகை பொங்கி மலர்ந்தென நளினச் செங்கை
தன்னிடை வயங்கு செங்கேழ் இணர்எரித் தழல்கூத் தாட.     51

     புல்லிய புறச்சமய நெறியில் நின்று எமது பெருமானாரைப் பழித்துத்
துன்பத்தையுற்ற இவர்களை எனக் குணவாக அருள் செய்யும் இறைவனார்
என்றுட் கொண்டு நிலை பெறும் பெருமகிழ்ச்சி மிக்கு மலர்ந்தாற் போலத்
தாமரை மலர் போலும் நிறமுடைய அகங்கையில் விளங்குகின்ற செந்நிறம்
பொருந்திய கொத்தாகி அழல் மலர் தலையுடைய மழுப்படை துள்ளவும்,

உய்திறன் உணரா மற்றை உம்பர்போல் பழிப்பு ணாமே
செய்திறன் முன்னர்த் தேறிக் கொடிஞ்சித்தேர் செலுத்தி உய்ந்த
மைதபு தன்னோன் சீலம் அறிந்துள மகிழ்ச்சி பூத்தாங்
கைதென அயன்க பாலம் அற்புத முறுவல் காட்ட.          52

     பிழைக்கும் உபாயத்தை அறியாத விண்ணவரைப்போலப் பழிப்பைப்
பெறாமே செய்யத்தக்கதை முன்னமே ஆராய்ந்து தெளிந்து கொடிஞ்சி
என்னும் உறுப்புடைய தேரைச் செலுத்தும் சாரதியாய்ப் பிழைத்த குற்றமற்ற
தன்னை ஒத்த பிரமனின் திறத்தினை எண்ணி உள்ளம் மகிழ்ச்சி பூத்தது
போல அழகிதெனப் பிரமகபாலம்வியக்கத் தக்க புன்முறுவலைக் காட்டவும்,

மாறடு மதுகைத் தன்னை வள்ளலுக் கியம்பிக் கொல்வித்
தூறுகாண் அமரர் இந்நாள் உலந்தவா நோக்கி ஓகை
ஏறுதன் முடிஅ சைத்துத் தகும்தகும் என்ப தேபோல்
ஆறணி சடில மோலிக் கொக்கிற கசைவுற்றாட.        53