382காஞ்சிப் புராணம்


     ‘தாதை என்னும் நிலையை அடைந்தும் தீங்கையே மேற்கொண்ட
வனாகிய தக்கனுக்கு நலம் செய்யப் போதுகிலேன் யான்’ என்று பிணங்கும்
நாகணவாய்ப் பறவையை ஒத்த அம்மையாரைத் தழீஇக் கொண்டு செல்லும்
தன்மையை ஒப்பத் தேவியாரை இடப்புறத்துத் திருக்கையால் விரும்பி
வலிதாகத் தழீஇ அணைத்திடுங் காட்சி புலப்படவும்,

குருதிஎன் பிரத்தம் மூளை குடர்உடற் குறைகள் துன்றும்
பொருகளந் திருக்கண் சாத்தாப் பொருட்டவண் மறைப்பார் போலத்
தருமலர் மாரி தூவி உருத்திர கணங்கள் சாரக்
கருணை கூர்ந் தருளித் தோன்றுங் கடவுளை எவருங் கண்டார்.  58

     செந்நீரும், எலும்பும், தசையும், மூளையும், குடரும், கவந்தங்களும்
செறியும் போர்க்களத்தைப் பெருமானார் திருக்கண்கள் காணாதவாறு
அவ்விடத்துப் பொருள்களை மறைப்பார் போல ஐந்து தெய்வத் தருக்களின்
மலர் மழையைச் சொரிந்து சிவகணங்கள் உடன் வரத் திருவருள் மிகுந்து
எதிர் எழுந்தருளிய பெருமானை யாவருங் கண்டனர்.

கொடுங்கனாக் கண்டு வேர்த்துக் குழறிவாய் வெரூஉங்கால் அன்னை
அடுங்கனா ஒழித்து வல்லே அணைத்திடப் பெறுஞ்சி றார்போல்
நடுங்குறும் இமையோ ரெல்லாம் நாதனைக் காண்ட லோடும்
நெடுங்களி துளும்பி ஓகை நீடினார் வணங்கி நின்றார்.         59

     அச்சந் தருகின்ற கொடிய கனவைக் கண்டு பயந்து வியர்த்து வாய்
குழறி அழுங்கால் துயிலுணர்த்திக் கனவைப் போக்கித் தாயால் விரைய
அணைத்துக் கொள்ளப் பெறும் சிறுவரைப் போல நடுக்க மெய்தும் தேவர்
யாவரும் சிவபெருமானாரைக் கண்ட பொழுதே பெருங்களிப்புத் ததும்ப
உவகை பெருகினார். வணங்கி நின்றனர்.

இன்னரை நோக்கி எங்கோன் முறுவலித் தெமக்கு வேள்வி
தன்னிடைப் பாகம் என்னே தந்திலீர் அஃது நிற்க
மன்னுபோர் அடுபே ராண்மை வலியினீர் பலரும் என்னே
பன்னும்ஓர் வீரற் காற்றா துடைந்தனிர் பகர்மின் என்றான்.   60

     இவர் தம்மை நோக்கி எமது பெருமான் புன்னகை காட்டி அருளி
வேள்வியில் எமக்கு அவிப்பாகம் என்னே தந்தீலீர்; அதுவும் நிற்க,
நிலைபெறும் போரில் அடுகின்ற பேராண்மையையுடைய வன்மையீர்! நீவிர்
பலரும் தனியன் எனப்பெறும் ஓர் வீரனொடு பொருதற் கியலாது புறங்
கொடுத்தனிர் என்னே கூறுமின்’ என்று வினவியருளினர். 

வின்னவர் வேண்டுகோள்

அடியிணை தொழுது மாயோன் முதலிய அமரர் சொல்வார்
அடிபடும் எங்கள் ஆண்மை துரும்பொன்றில் அன்றே கண்டாய்
அடியராம் எம்மைப் பல்கால் குரங்குபோல் ஆட்டு விப்ப
தடிகளுக் கழகோ எந்தாய் ஆற்றிலேம் உய்யக் கொள்வாய்.   61