தக்கேசப் படலம் 383


     திருவடிகளை வணங்கி நின்று திருமால் முதலியோராகிய தேவர்
கூறுவார். தாக்குண்டு வருந்தும் இயல்புடைய எங்கள் ஆண்மையை ஓர்
துரும்பிடை வைத்து அளந்து காட்டினீர்! அடியேமாகிய எங்களைப் பல
சந்தர்ப்பங்களிலும் குரங்குகளைப் போல ஆட்டுவிப்பது அடிகளுக்கு
அழகிதேயோ! எந்தையே! பொறுக்கும் வலியிலேம்; பிழையினின்றும்
பிழைக்குமாறு கொள்வாயாக.

அத்தனே பல்கால் இவ்வா றுணர்த்தியும் ஆடை மாசின்
மைத்துறு பேதை நீரால் பின்பினும் மயங்கு கின்றேம்
கைத்தளை யாடி ஓச்சிக் காதியும் ஆள்வர் அல்லால்
எத்தனை பிழைசெய் தாலும் இகப்பரோ அடிமை பெற்றோர்.  62

     தந்தையே! பன்முறையும் இவ்வகையாக உணரச் செய்தும் ஆடையில்
அழுக்கேறுதல் போலக் கறுத்துப் பொருந்தும் அறியாமைத் தன்மையால்
மேன்மேலும் மயக்க முறுகின்றோம். அடிமையை ஏவல் கொள்வோர்
கையில் விலங்கு பூட்டியும், அடித்தும், வருத்தியும் தொழிலில் ஆளுவ
தல்லாமல் எத்தனை பிழை செய்யினும் நீக்குவார்களோ?

கறுத்தநின் மிடறு நோக்கேம் கையணி கபாலம் நோக்கேம்
வெறுத்தவெள் ளென்பு நோக்கேம் விழியடி கிடத்தல் நோக்கேம்
குறுத்தமோட் டாமை ஓடும் பன்றியின் கோடும் நோக்கேம்
இறுத்திடும் விதியின் ஆறே மதிஎனல் எம்பாற் கண்டேம்.    63

     ‘கருமை தங்கிய நினது திருக்கழுத்தை நோக்கேம்! திருக்கையில்
அணிசெய் பிரம கபாலத்தை நோக்கேம்! செறிந்த வெள்ளென்பு மாலையை
நோக்கேம்! மலராகச் சாத்திய கண் திருவடியிற் கிடத்தலை நோக்கேம்!
பறித்த பெரிய அவதாரப்பன்றியின் கொம்பினை நோக்கேம்! தங்கும் விதிவழி
மதி செல்லும் எனக் கூறுதல் எம்மிடத்துக் கண்டேம்!’

     நோக்கேம் எனத்தனித்தனி கூறுதல் பரிபவத்தை எடுத்துக்
காட்டுவதாகும்.

பொங்கருட் பரமா னந்த பூரண முதலே இங்கு
நங்களை ஆளத் தோன்றி ஐந்தொழில் நடாத்தல் ஓரேம்
மங்கையை மணந்தாய் என்றும் மக்களை உயிர்த்தாய் என்றும்
எங்களில் ஒருவ னாக எண்ணியே இகழ்ந்து கெட்டேம்.     64

     மிகுகின்ற அருளுதலையுடைய மேம்பட நிறைந்த இன்ப முதல்வனே! 
இவண் எம்மை ஆட்கொள்ளத் திருவுருக் கொண்டைந்தொழில் புரிதலை
உளங்கொள்ளேம். உமையம்மையை மணந்தனை என்றும் மக்களை ஈன்றனை
என்றும் எம்மொடும் உடன் வைத்து ஒருவனாக மதித்தலால் இகழ்ந்து
கேடுற்றேம்.

     ‘சாவமுன் னாள் தக்கன்’ (திருவா) காண்க.