கடவுள்யாம் செருக்கா வண்ணம் கண்டனம் உய்யு மாற்றால் விடமுதல் அடையா ளங்கள் நின்திரு மேனி வைத்தாய் அடலுறும் அவையுந் தேறாச் செருக்கறிந் திந்நாள் எங்கள் உடலினும் அடையா ளங்கள் உறுத்தினை போலும் உய்ந்தேம். 65 | ‘கடவுளே! யாங்கள் செருக்குற்றுக் கெடாத வகையில் கண்டுய்யும் முறையால் திருநீல கண்டம் முதலிய அடையாளங்களை நின்திருமேனியிற் பூண்டனை. வன்மை மிகும் அவை சான்றாகவும் தெளியாத இறுமாப்பினை அறிந்து இந்நாளில் எங்கள் மேனியினும் பல அடையாளங்களை உறச் செய்தனை போலம்; ஆகலின், உய்ந்தேம்.’ ‘அடித்தடித்து வக்காரம் தீற்றிய அற்புதம் அறியேனே’ ‘ஒறுத்தால் ஒன்றும் போதுமே’ இன்றெமை ஒறுப்ப வீரன் போந்ததுன் ஏவ லாக அன்றெமை ஒறுப்பப் போந்த விடமும்உன் அருளே என்று மன்றயாம் தெளிந்தேம் இந்நாள் இடித்தெமை வரைநி றுத்தல் என்றும்நின் கடனே யன்றோ ஈறிலாக் கருணை வாழ்வே. 66 | இன்றெங்களைத் தண்டிக்க வீரபத்திரர் போந்தது தேவரீர் ஆணையாகலின், அன்றெங்களைத் தண்டிக்கப் போந்த விடமும் உன் அருளாலே தோன்றிய தென்று நிச்சயமாக யாம் தெளிந்தனம். இந்நாள் கழறி எம்மை ஆணை வழி நிறுத்துதல் என்றும் நினது கடப்பாடே அன்றோ? ஈறிலாத மாக்கருணை வெள்ளமாகிய வாழ்வே! அன்றுனை மதியா தாழி கடைந்ததூஉம் அன்றி எம்மேல் சென்றடர் வதனுக் கஞ்சிச் செல்வநீ அமுது செய்யக் கொன்றிடும் நஞ்சங் காட்டிக் குற்றமேல் குற்றஞ் செய்தேம் இன்றுனை இகழ்ந்த தொன்றோ டொழிதலின் உய்ந்தேம் எந்தாய். 67 | முன்னாள், அருள் வழி நில்லாது அடியேம் முயன்ற குற்றமே அன்றிப் பாற்கடலில் கொல்ல எழுந்த விடத்தை நிவேதனமாக்கிக் குற்றத்தின் மேலோர் குற்றம் புரிந்தேம். எந்தையே! இந்நாள் இகழ்ந்த குற்றம் ஒன்றோடொழிதலின் உயிர் தப்பினோம். அளவறு காலந் தீவாய் அள்ளலிற் குளித்தும் தீரா வளரும்இச் சிவத்து ரோகம் வயப்புகழ் வீரன் றன்னால் எளிதினில் தவிர்த்தாய் அன்றே இப்பெருங் கருணை கெந்தாய் தெளிவிலாச் சிறுமை யேங்கள் செய்குறி யெதிர்ப்பை என்னே. 68 | ‘பல்லூழி காலம் கொடிய நரகிடை மூழ்கியும் உண்டு கழியாது எஞ்சி நிற்றற்குரிய சிவ நிந்தனையால் வருங்குற்றத்தை வீரபத்திரர் தம்மைக் கொண்டு தண்டம் இயற்றிச் சிறிது காலத்துள் எளிதாகத்தவிர்த்தாய். ஆகலின் இப்பேரருட்டிறத்தினுக்குத் தெளிவில்லாத சிற்றறிவினேம் செய்யத்தக்க கைம்மாறு எவன் உளது.’ என்று நீ அன்று நான் உன்னடிமை ஆகலின் அவனுக்கு உரிமை யாக்கி ஈடு செய்ய வழக்கில்லை என்றபடி. |