எனவே, முப்பராரி கோட்டம் எனப்பெற்றது-கோட்டம்-கோயில், முப்பு ரத்துறை வோருள் இங்கிவர் மூவ ருந்திரு நாயகன் செப்பு மாய மயக்கி னுக்குள் அகப்ப டாது செழுந்தழற் கைப்ப ரம்பொருள் பத்தி வாய்மை கடைப்பி டித்து நிலைத்தவா றெப்ப டித்திது அற்பு தச்செயல் எங்க ளுக்குரை என்றலும். 6 | முப்புரத் துறை யசுரர்களுள் இவர் மூவரும் இலக்குமி நாயகன் கூறிய வஞ்ச வலைக்குள் அகப்படாமல் செழுமிய நெருப்புருவான மழுவைத் திருக்கையில் கொண்ட பரம்பொருளின் மெய்யன்பினை உறுதியாகக் கொண்டு பிறழாது நிலைபெறல் எங்ஙனம் கூடுவது. அற்புதச் செயல் இதனை எங்களுக்கு விரித்துரைத்தருள் என்ற அளவிலே, மயக்கினுள் மூவர் தப்பிய நிலை அதிசயிக்கத் தக்கதாம் என வினவுவர், தழல் ஏந்திய குறிப்பு நெருப்பில் ஏவலரைப் பிரிக்கும் வல்லமையை உணர்த்தும். தத்து வெண்டிரை வேலை நஞ்சம் மிடற்ற டக்கிய தம்பிரான் பத்தி மார்க்கம் இரண்டு கூற்றது பற்ற றுத்துயர் அந்தணீர் புத்தி நல்குவ தொன்றி ரண்டறு பூர ணப்பொரு ளோடுலாம் முத்தி நல்குவ தொன்றி ரண்டனுள் முன்இ யம்பிய பத்திதான். 7 | யான் எனது என்னும் இருவகைப் பற்றும் அற்றமையால் உயர்ந்த அந்தணீர்! தவழ்கின்ற வெள்ளிய திரைகளையுடைய பாற்கடலிற் றோன்றிய விடத்தினைக் கண்டத்தில் அடக்கிய உயிர்களின் தலைவன் அன்பு நெறி இருபகுப்பினது. ஒன்று போகங்களை நல்குவது. மற்றொன்று எல்லாப் பொருளிலும் வேற்ற அவையேயாய் நிறைந்து நிற்கும் முதற் பொருளொடு கலக்கும் முத்தியை வழங்குவது. இவ்விரண்டனுள் முதற்கண் உணர்த்திய பத்தி. சார்பு பற்றி உதிக்கும் மற்றைய தொன்று சத்தி பதிந்தமெய்ச் சார்பின் எய்தும் இரண்டும் முத்தி தழைக்கு மாயினும் வெவ்வினைச் சார்பி னோர்பெறு சார்பு பற்றிய பத்தி தான்இடை விள்ளும்அச் சார்பி லாதெழும் உண்மை அன்பு தணப்பு றாதெவர் கட்குமே. 8 | யாதானும் ஓர் பயனை வேண்டு அது குறித்து உள்ளத்து உதிப்பது. பிறிதொன்று திருவருட் சத்தி பதிந்த இயல்பின் எழுதலின் உண்மைச் சார்பின் உதிக்கும். இரண்டும் முத்தியைத் தழைக்கச் செய்யுமாயினும் கொடிய வினைத் தொடர்புடையோர் அடைகின்ற ஒன்றை விரும்பிச் செய்கின்ற பேரன்பு இடையில் நீங்கும். நிஷ்காமியமாகத் தோன்றும் உண்மை அன்பு எவர்க்கும் என்றும் நீங்காது. சார்பு பற்றிய பத்தி: ‘‘அவாவுண்டேல் உண்டாம் சிறிது’’ (திருக். 1075) ‘தம்மால் அவாவப்படும் பொருள் அதனாலுண்டாமாயிற் சிறிதுண்டாம்’ (பரி. உரை-) காண்க. பரிசயத்தால் அறிவு மாற்றலுமுடையராய் முடிவு போக்கலின் தவமுடையார்க் காகுமென்றும், அஃதில்லாதார்க்கு அவையின்மையின் முடிவு போகாமையின் அவமா மென்றுங் கூறினர்’ (திருக். பரி.) உரை. 262) சார்பு பற்றிச் செய்யப் படுவன |