392காஞ்சிப் புராணம்


பதும வாழ்க்கையான் படைக்கும் ஆற்றலும்
மதுவை மாட்டினான் அளிப்பும் வான்மிசை
அதுல னாதியோர் ஆசை ஆட்சியும்
பொதுந டிப்பவன் பூசைப் பேறரோ.             5

     மலருறை பிரமன் படைக்கும் வன்மையும், மது என்னும் அசுரனை
அழித்த மதுசூதனன் உலகைக் காக்கும் வன்மையும் விண்ணிலும்
ஒப்பில்லாதவனாகிய இந்திரன் முதலானோர் எண்டிசைக் காவலும்
பொதுவில் நடம்புரியும் பெருமான் பூசனையின் பயனாவன,

     அதுலன்-ஒப்பிலி. ஆசை-திசை, பொது-மன்றம்.

செல்வம் ஆண்மைஏர் சீர்த்தி வாழ்வருள்
கல்வி கட்டெழில் மகளிர் காழ்இலாச்
சொல்வ லித்திறஞ் சூழ்ச்சி ஏனவும்
அல்வெ ரூஉங்களன் அருச்ச னைப்பயன்.         6

     செல்வமும், ஆண்மையும், அழகும் மிகு புகழும், வாழ்வும்,
இரக்கமும், கல்வியும், பேரழகுடைய வாழ்க்கைத் துணைவியும், இனிய
சொல்வன்மையையும், பழுதற எண்ணலும், பிறவும் இருளும் அஞ்சுங் கரிய
கண்டத்தையுடைய சிவபிரானைப் பூசனை புரிந்ததன் பயனாவன.

மெய்த்த விண்ணவர் இருக்கை வேண்டினும்
நத்து மாலயன் நகரம் வேண்டினும்
முத்தி வேண்டினும் மூவ ருஞ்சிவ
பத்தி ஒன்றனால் எய்தற் பாலவே                 7

     அமராவதியையோ அன்றிச் சத்திய லோகத்தையோ அல்லது
வைகுந்தத்தையோ விரும்பினும், வீட்டினை விரும்பினும் கெடுதலில்லாத
சிவபத்தி ஒன்றனால் அடையற் பாலன.

     போகமும், பரபோகமும், இறைவன் பூசனையால் பெறற்குரியன.

ஒன்ன லார்பிணி உரகம் மண்ணைகோள்
என்ன வும்அவர்க் கிடர்இ ழைத்திடா
அன்ன ஆகலான் அரன்அ டித்தொழில்
முன்னி னார்க்கெவன் அரிது மொய்ம்பினோய்.     8

     தோள்வலியை யுடையவனே! பகை நோய், பாம்பு, பேய், கிரகங்கள்
இவற்றெத்திறத்தனவும், மெய்யன்பர்க்குத் துன்பஞ் செய்யா. இடையூறு
நிகழா ஆகலான் சிவபிரான் திருவடித் தொண்டில் முயன்றவர்க்கு யாவும்
எளியன ஆகும்.

அறுசீரடி யாசிரிய விருத்தம்

சிவன்றன் திருஉருவைக் காணாத கண்ணே குருடாம் சீர்சால்
சிவன்றன் திருஉருவை எண்ணாத சிந்தையே பித்தாம் என்றும்
சிவன்றன் திருப்புகழைக் கேளாச் செவியே செவிடாம் அன்பிற்
சிவன்றன் திருப்புகழை ஓதாத வாயே திணிந்த மூங்கை.     9