சிவபிரான் திருவடிவைக் காண்கிலாத கண்ணே குருடு ஆகும். சிறப்பமைந்த சிவபிரான் அருட்டிருமேனியை எண்ணாத எண்ணமே மயக்குடையதாகும். எப்பொழுதும் சிவபிரான் திருப்புகழை, ஏலாத செவியே செவிடாகும். சிவபெருமான் திருப்புகழை அன்பால் ஓதாத வாயே ஊமையாகும். இயல்பிற் குருடர், பித்தர் செவிடர், மூகர் இவர் தம்மை விலக்கி வாழ்த்தவாயும், நினைக்க மட நெஞ்சும் பிறவும் தந்த பெருமான் பாற் சார்த்தாத உறுப்புக்களே உண்மையிற் குறைபாடுடையன என்க. நில்லா திளமையும் யாக்கையும் இன்னினியே நீங்கும் அன்றிப், பொல்லாத நோயும் அடர்ந்துபெரும் பையுள் புகுத்து நீரால் எல்லாம் நரைத்துடலம் ஏகாமுன் நன்னெறிக்கே செல்வோம் என்னா. வல்லான் உகைத்தானை அர்ச்சிப்பார் இவ்விடும்பை வாழ்க்கை வெல்வார். 10 ‘இளமையும் நில்லாது; இப்பொழுதே உடம்பும் நீங்கும்; அல்லாமல், கொடிய நோயும் படை எடுத்துப் பெருந்துன்பத்தைப் புகச்செய்யும். இயல்பினால் உரோம முற்றும் நரை தோன்றி உடம்பு விடை பெற்றுக் கொள்ளுமுன்பே திருவருளிற் றலைப்படுவோம்’ என்றுட்கொண்டு வலிய இடபத்தை ஊரும் பெருமானைப் பூசனை புரிவார் இத்துன்ப வாழ்வினை வெல்வார். இழிவறிந்து இருவகைப் பற்றும் விட்டு இறைவனைப்பற்றினோர் இன்புறுவர். பத்தன் மொழிப்பகுதி சேவையினைக் கூறும் பரிசால் ஈசன் பத்தன் அவற்கினிய சேவகனே ஆதலின்இப் பான்மை பூண்ட பத்தர் படிமம் ஒழுக்கங் குலன்ஒன்றும் பார்க்க வேண்டா பத்தர் எனப்படுவார் கண்டிகையும் நீறும் பரித்த மெய்யோர். 11 | ‘பத்தன் என்னும் சொல்மூலம் சேவை என்னும் பொருளைத் தரும் இயல்பினாலே ஈசனுக்குப் பத்தன் அவ்வீசனுக்கினிய ஆணை வழி நிற்போனே ஆகலின் இத்தன்மையை மேற்கொண்ட தொண்டருடைய வடிவம், நடை, மரபு இவற்றைச் சிறிதும் எண்ணலாகா. பத்தர் என்று சிறப்பித்துப் பேசப் பெறுவோர் உருத்திராக்கவடமும், திருநீறும் பூண்ட திருமேனியை யுடையவர்’ அங்கவரைக் காணப் பெறுகிற்பிற் கங்கைநீ ராடற் பேறாம் அங்கவர்பாற் பேசப் பெறின் அகில தீர்த்தமுந் தோய்ந்தார் ஆவர் அங்கவர்க்குச் செய்பூசை அண்டருக்கும்மூவருக்கும் ஆகுங்கண்டாய் அங்கவர்க்கே தானம் அளிப்பர் அவர்தம்பால் ஏற்பர் நல்லோர். 12 | ‘பத்தரைக் காணப்பெற்றால் கங்கை நீராடலால் வரும் பயன் விளையும். அவரொடு பேசும் வாய்ப்புண்டாயின் எல்லாத் தீர்த்தங்களிலும் படிந்ததனால் வருபயனுடையர் ஆவர். அவர்க்குச் செய்யும் பூசனை தேவர்க்கும் மூவர்க்கும் ஏற்புடைத்தாம். பத்தர்க்கே தானம் கொடுப்பர் பத்தரிடத்தே தானம் பெறுவர் நல்லவர். |