மாயன் அயன் விண்ணாடர் வாழ்வுந் துரும்பா மதிக்கும் இந்தத் தூய சிவனடியார் மேம்பாடி யானேயோ சொல்ல வல்லேன் பாய பெருங்கீர்த்தித் தோன்றால் பலசொல்லி என்னை இந்நாள் ஆயபிற வெல்லாங் கழித்துச் சிவனடியே அர்ச்சித் துய்வாய். 13 | ‘பரவிய பெரும் புகழினையுடைய தோன்றலே! திருமால் பிரமேந்திரர் பதத்தையும் துச்சமாக இகழ்ந் தொதுக்கும் மல நீங்கிய சிவனடியவர் தம் பெருமையை யானேயோ புகழும் வலியுடையேன். பலபடப் பேசிப் பயன் எவன்? விரிந்த பிறமுயற்சிகளை எல்லாம் ஒருவிச் சிவபிரான் திருவடி களையே பூசனை புரிந்து கடைத்தேறுவாயாக!’ என்னுங் குரவன் இணைத்தாள் தொழுதோகை எய்தி எந்தாய் பன்னும் பரம்பொருளை எத்தானத் தெவ்வாற்றாற் பண்பு கூரப் பொன்னங் கழலிணைகள் பூசித் திடுவதெனும் பொன்னோன் கேட்ப மன்னும் பிருகு தரவந்த மைந்தன் வகுப்பான் மன்னோ. 14 | என்றறிவுறுக்கும் ஆசாரியனுடைய இருதாள்களையும் தொழுது வகையை அடைந்து எந்தையே! பேசப் பெற்ற முதல்வனை எத்தலத்தில் எம்முறையால் அன்பு மீதூரப் பொன்னாலியன்ற அழகிய கழலணிந்த திருவடிகளைப் பூசனை புரிவதென்று வினவும் இரணியனுடைய செவியிற் புகப்பெருமையுறும் பிருகுமுனிவர் ஈன்ற சுக்கிரன் வகுத்துக் கூறுவான். மேற்படி வேறு எங்கணும் நிறைந்து நிற்கும் எம்பிராற் கினிய வாய பங்கமில் வரைப்பு மண்மேற் பலஉள அவற்றுட் காசி அங்கதிற் காஞ்சி மேலாங் காஞ்சியின் அதிகம் இல்லை செங்கதிர் மதியஞ் செந்தீ மண்டிலம் அடியர் உள்ளம். 15 | யாண்டும் நீக்கமற நிறைந்து எவற்றொடும் உடனாய் நிற்கும் எமது பெருமானுக்கு இனிய ஆகிய குற்றமற்ற தலங்கள் பல இவ்வுலகில் உள்ளன. அவற்றுள் மிக்கதோர் தலம் காசியாகும். அதனினும் மிக்கது காஞ்சி. அதனிற் சிறந்த தலம் இல்லை. சூரிய மண்டிலம், சந்திர மண்டிலம், செந்தீ மண்டிலம், அடியவர் உள்ளங்கள், மந்தரங் கயிலை தம்மின் மேம்பட வயங்கித் தோன்றும் அந்தமா நகரின் எங்கோன் வல்விரைந் தருள்சு ரக்கும் மந்திர எழுத்தஞ் சோதிப் பச்சிலை மலர்ஏ தேனும் சிந்தைகூர் அன்பிற் சாத்தித் தொழுவதே சிவனுக் கின்பம். 16 | மந்தரம், கயிலை இவற்றை ஒப்ப அக்காஞ்சிமாநகரின் எமது பெருமானார் மேம்பட விளங்கித் தோன்றுவர். மிக விரைந்தருள் வழங்கும் திருவைந்தெழுத்தாகிய மந்திரத்தை ஓதிப் பச்சிலையாயினும், மலராயினும் கொண்டு மனத்திடை அன்பு மிகச் சாத்தி வணங்குவதே சிவபிரானுக்கு மகிழ்ச்சியை விளைவிப்பதாகும். ‘பச்சிலை பழம்போ தேனும்’ (233-ஆம் பக்கம் காண்க,) |