நாரசிங்கேசப் படலம் 397


தக்கன் வேள்வியஞ் சாலை அவியுணப்
புக்க தேவர் புரளச் சவட்டிய
முக்க ணன் அருள் பெற்றபின் மூவுல
கொக்க ஆடகன் தாட்படுத் தோங்கலால்.        2

     தக்கன் வேள்வியில் அவிபெறச் சென்ற தேவரை அவ்விடத்தே
புரளுமாறு அழித்த சிவபிரான் அருளைப்பெற்று இரணியன் மூவுலகையும்
தன்னடிப் படுத்துயர்தலால்,

     தேவரைச் சவட்டிய முக்கணன் அருளை ஆடகன் பெற்றபின்
என்னும் குறிப்பு விண்ணவர் குழாம் செய்தபாவத்தால் அவுணர் ஆக்கம்
பெறுகின்றனர் என்பதாம்.

வண்ண வண்டிமி ராமலர்க் கற்பகக்
கண்ணி விண்ணவர் யாருங் கவன்றுபோய்த்
தண்ண றுந்துள வோனடி தாழ்ந்தெழூஉக்
கண்ணி லாக்கன கன்செயல் கூறலும்.            3

     அழகிய வண்டுகள் மூசாத கற்பக மலர் மாலையைச் சூடிய தேவர்
யாவருங் கவலையை எய்திப்போய்த் தண்ணிய நறிய துழாய் மாலையை
அணிந்த திருமாலடி வணங்கி எழுந்து இரக்கமில்லாத இரணியனுடைய
கொடுஞ் செய்கைகளைக் கூறியபோது,

     கனகம், ஆடகம், இரணியம் என்பன பொன்னின் பரியாயப் பெயர்கள்,
ஆகலின், பொன்னோன் எனப் பல் பெயர் வந்தன.

ஐம்ப டைத்திறல் ஆண்டகை காஞ்சிபுக்
கெம்பி ரான்றன் இணையடி ஏத்துபு
வெம்பு தெவ்வினை வெல்லும் உபாயம்அவ்
வும்பர் கோன் அருள் செய்ய உணர்ந்தரோ.       4

     பஞ்சாயுதங்களையுடைய புருடோத்தமன் காஞ்சியை அடைந்து எமது
பெருமான் திருவடிகளைத் துதி செய்து கொடிய பகைவனாகிய இரணியனை
வெல்லுதற்குரிய உபாயத்தைத் தேவதேவன் உணர்த்தி அருளத் தெளிய
உணர்ந்து,

     ஐம்படை-சங்கு, சக்கரம், வில், வேல், வாள், தண்டம், என்பன, அரோ,
தேற்றப் பொருளது.

உந்து தன்னொரு கூற்றை உவன்பெறு
மைந்தன் மாடுற வைத்துத் தருக்குழி
எந்து நீஇனி உய்திறன் ஈங்கெனாச்
சுந்த ரப்பொலந் தூணங் கிழித்தெழீஇ.            5

     தூண்டுகின்ற தனது ஓர் அமிசத்தை அவ்இரணியன் ஈன்ற பிரகலாதன்
பால் வைத்துத் தந்தையும் மைந்தனும் மாறுபட்டுச் செருக்குழி ‘என்ன நீ
இப்பொழுது பிழைக்கும் வகை இவ்விடத்து’ என்று கூறி அழகிய
பொன்மயமான தூணைப்பிளந்தெழுந்து,