கொட்கும் மானிடக் கோளரி யாகிஅவ் வட்கி லானைக் கவான்மிசை வைத்திருள் நட்கும் அந்தியின் வாய்தலின் நள்ளிருந் துட்கு கூர்உகிர் கொண்டுரங் கீறியே. 6 | சுழன்று திரியும் நரசிங்க வடிவிற் றோன்றி அழிவில்லாத இரணியனைத் துடையின்மேல் வைத்து இருள் கலக்கும் அந்தி நேரத்தில் வீட்டின் வாயிற்படியின் நடுவில் இருந்து அஞ்சுதற்குரிய கூரியநகங்கொண்டு மார்பினைக் கிழித்து, வன்க ணான்உயிர் வவ்வி இரத்தநீர் என்கண் ஆகென வாய்மடுத் திம்மெனத் தன்கண் எய்துந் தருக்கின் மயங்கினான் புன்கண் மும்மைப் பொழிற்கும் விளைத்தனன். 7 | ‘தறுகணாளனாகிய இரணியன் உயிரைக் கவர்ந்து செந்நீரை என்னிடத்தே ஆகுக’ என்றுட்கொண்டு முற்றும் பருகி விரையத் தன்னிடத்துத் தோன்றிய செருக்கினால் மயங்கி மூவுலகிற்கும் துன்பத்தை உண்டாக்கினன். நால்வகைத் தோற்றமும் கடந்து தூணில் தோன்றியும், எழுவகைப் பிறப்புட்படாது இருதிறனமைந்த நரசிங்கமாகியும், மண் விண்ணொழித்துத் துடைமேல் வைத்தும் பகலிரவு தவிர்த்து அந்திப்பொழுதிலும், உள், வெளி விடுத்து வாயிற்படியிலும், படையின்றிக் கைவிரல் நகங்களினாலும், ஈரமும் வறட்சியுமில்லாத முற்றத்து நீர் தெளித்த இடத்திலும், அவன் இரத்தம் நிலத்தில் சிந்தின் அவனை ஒப்பவர் பால் தோன்றுவராகலின் இரத்தத்தைப் பருகியும் திருமால் இரணியனைக் கொன்றனர். இரணியேசப் படலம் 21-ஆம் செய்யுளையும் ஒப்பு நோக்கிக்காண்க. இப்படலம் 4-ஆம் செய்யுளில் வரும் உபாயம் இச்சூழ்ச்சியே உயிர்களின் அறிவைக் கடந்து நிற்கும் இறைவன் தந்தவரத்தைத் தவிர்க்கும் நிலைமையை அறிவன் என்பதனை அறியாமை உயிரியல்பு. பிரக லாதன் பிறங்கெழிற் செய்யவள் சுரரும் ஏத்தித் துதிசெயும் நன்னய உரையுங் கேட்கலன் உன்மத்தம் மேலிடின் கரையும் மென்மொழி காதினில் ஏறுமோ. 8 | பிரகலாதனும், பேரழகினையுடைய திருமகளும், தேவரும் போற்றிப் புகழும் நல்லறிவுரையையும் செவி சாத்திலன். வெறி மிகின் பிறர் கூறும் இனிய மொழி செவித்துளையில் சாருமோ? மென்மொழி-இதோபதேசம். தீயவரைச் செகுத்து நல்லவரைக் காக்க வந்த அவதரச் செயல் வென்றியால் அருளை மறந்து உலகிற்குக் கேடு சூழ்தல் உயிர்களின் இயற்கை. |