நாரசிங்கேசப் படலம் 399


உய்தி இல்லவன் சோரிஒன் றித்துணை
வெய்ய வாய செருக்கு விளைக்குமேல்
பையுள் சூழ்அப் பதகன் கொடுமையை
ஐய யாவர் அளவிடற் பாலரே.                  9

     உய்யுந் திறம் இல்லவனாகிய இரணியன் இரத்தம் ஒன்றே உட்புகுந்து
இவ்வளவு கொடிய இறுமாப்பின் செயலை விளக்குமாயின் துன்பத்தை
விளைக்க எண்ணிய அப்பாவி இரணியன் கொடுமையை ஐயகோ! யாவர்
அளவிடற் பாலரே.

     ஐய, இரக்கக்குறிப்பு. ‘பூனைக்கு இத்துணை அஞ்சுவான் புலிக்கு
எத்துணை அஞ்சான்’ என்னும் கைமுதிக நியாயம் காண்க. ‘துன்னியார்’
(திருக். 188-ம் 1165-ம்)இந்நியாயத்தன.

சரபம் வருகை

அனைய காலை அயன்முதல் விண்ணவர்
இனையும் நெஞ்சினர் அஞ்சினர் எம்பிரான்
றனைய டைந்து சரணம்என் றேத்தினார்
வினைஇ கந்துயர் மந்தர வெற்பின்மேல்.        10

     அக்காலத்தில் பிரமன் முதலாந்தேவர்கள் வருந்தா நின்ற நெஞ்சினராய்
அஞ்சினர். தீவினை தீர்ந்துயர்தற் கிடனாகிய மந்தர மலைமேல் எமது
பெருமானை அடுத்து ‘அடைக்கலம்’ என்று கூறித்துதித்தனர்.

வாய்பு லர்ந்து நடுக்குற வந்தவர்
ஏய வார்த்தை திருச்செவி ஏற்றனன்
பாய பல்கணம் ஏத்தப் பனிவரை
யாயி னோடினி தாடல்செய் ஆண்டகை.         11

     பரவிய சிவகணங்கள் போற்ற இமயமலையன் மகளாராய் நம்
அன்னையாராம் அம்மையாரொடும் இன்பப்பொழுது போக்கினில் விளங்கும்
பெருமானார், வாய் உலர்ந்து நடுக்கம் மிக வந்த விண்ணோர் விடுத்த
அடைக்கலம் புகுமொழியைத் திருச்செவி சாத்தினர்.

அஞ்ச லீர்என் றளித்தனன் சிம்புளாய்
வஞ்ச மானிட வாளரி ஆயுளைத்
துஞ்சு வித்துரி கொண்டொளி தோற்றினான்
தஞ்ச முண்டவர் தஞ்சர ணாயினான்.            12

     ‘அஞ்சன்மின்!  நீவிர், என் றபயம் தந்து சரபப்பறவையாய்க் கொடிய
நரசி்ங்கத்தின் வாழ்நாளை முடித் ததன் தோலைப் போர்வையாகக்
கொண்டொளியொடுந் தோற்றினார். எளியராய் வந்தடைக்கலம் புக்க தேவர்
தம் புகலிடமானவர்.