குமாரக் கடவுள் முருகோட்டந் தரப்பாயும் மும்மதமும் ஊற்றெடுப்ப முரிவிற்கோட்டும், ஒருகோட்டு மழகளிற்றை இருகோட்டு முதுகளிறா உலவக் காட்டிப், பருகோட்ட நறைவேட்டுப் பைங்கோட்டுத் தினைப்புனத்துப் பரண்மேற் கொண்டு, குருகோட்டும் பெடைமணந்த குமரகோட் டத்தடிகள் குலத்தாள் போற்றி. 8 பறவைகள் தினைப்புனத்து வீழாமே கடியும்;வள்ளியம்மையாரின் இதழமுதம் விரும்பி, உபசார மும்மதமும், ஒருகொம்பும், இளமையும் உடைய யானைவடிவினராகிய விநாயகப் பெருமானை உண்மையாகவே மும்மதமும், இருதந்தமும், முதுமையும் உடைய யானையாகப் பரண்முன் வருவித்து அவ்வம்மையை மணந்த குமரகோட்டப் பெருமான் திருவடிகள் காப்பதாக! வயிரவக் கடவுள் மேற்படி வேறு எளியரை வலியர் வாட்டின் வலியரை இருநீர் வைப்பின் அளியறத் தெய்வம் வாட்டும் எனுமுரைக் கமைய அன்றே தெளியுமா வலியைச் செற்றோற் செகுத்துரிக் கவயம் போர்த்த வளியுளர் கச்சி காவல் வயிரவர்க் கன்பு செய்வாம். 9 | எளியரை வலியர் வருத்தின் அளியையுடைய அறக்கடவுள் அவ்வலியரை வருத்தும் எனும் மூதுரை உளது. அதற்கு இலக்கியமாக மாவலியை அழித்த நெடியோனை அழித்து அவரது தோலைக் கவசமாகப் போர்த்த, காற்று மிக்குலவும் காஞ்சியைக் காவல் கொண்ட வயிரவர்க்கு அன்பு வைப்பாம். வஞ்சனை அறிந்து வைத்தும் ஈதலே நன்றெனத் தெளிந்தமையால் தெளியும் மாவலி என்றனர். ‘நிக்கிரகங்கள் தானும் நேசத்தால் ஈசன் செய்வது ஆகலின்’ ‘அளி அறக்கடவுள்’ என்றருளினர். திருநந்தி தேவர் அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாத னாகிப் பங்கயந் துளவம் நாறும் வேத்திரப் படைபொ றுத்த செங்கைஎம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி. 10 | அகச் சந்தான புறச்சந்தானங்கட்குப் பரமாசாரியராய் அகம்படித் தொழின்மை பூண்டு குறை இரப்பக் குழுமி இருக்கும் திருமால் பிரமனாதியோரைக் கைப்பிரம்பு கொண்டு சந்நிதியில் விலக்கலின், அவர்தம் அடையாள மாலைகளின் துழாய், தாமரை இவற்றின் மணநாறும் பிரம்பினை ஏந்தியுள்ள திருநந்திதேவர் தம் சிறப்புப் பொருந்திய திருவடிக் கமலங்களை வணங்குவாம். |