அறத்து நூல்வழி ஆற்றுவ ஆற்றிஅத் திறத்தின் எஞ்சிய செந்நெற் குவையெலாங் குறித்தெ டுத்துநெற் கூடுய்த் தறச்செயல் மறப்பி லாத வளக்குடி எங்கணும். 109 | அறநூல் முறைப்படி கொடுக்க வேண்டுவ கொடுத்து அக்கூறு பாட்டின் மிஞ்சிய செந்நெற் குவியல் அனைத்தையும் அளந்து கொண்டு நெற் கூட்டினில் சேர்த்து, அறச்செயலை மறவாமல் வாழ் வளமுடைய குடிகள் எவ்விடத்தும் உள்ளன. குறைய வித்தின கொண்டு குடியெலாம் நிறையச் சாலி நிரப்புவ பூம்பணை இறைய ளித்த இருநாழி நெற்கொண்டே அறமெ லாம்நிறை விக்கும் அமலைபோல் 110 | மலர்களையுடைய வயலில் குடிகளெல்லாம் மிகச் சிறிய அளவில் வித்திய நெல்முளைகளைக் கொண்டு ஒன்று நூறாய நெற்குவியலைத், திருவேகம்பப் பெருமான் அளித்த இருநாழி நெற்கொண்டு முப்பத்திரண்டறங்களையும் நிறைவிக்கும் காமாட்சி அம்மையைப் போல நிரப்பின. அமலை-மலமில்லாதவள்; காமாட்சியம்மை. கொடுப்ப கொண்டு பெருக்கிக் கொடுத்தலால் அடுத்த வாணிகர் போலும் அகன்பணை உடுத்த சோலைகள் உம்பர் கடவுள்நீர் மடுப்ப தென்ன வளர்ந்தெழுந் தோங்குமால். 111 | இடம் பரவிய வயல்கள் தம்மிடத்து வித்திய சிறிய அளவைக் கொண்டு ஒன்று, பலவாகப் பெருக்கிக் கொடுத்தலினால் வளர்ச்சி செய்யும் தொழிலில் அடுத்த வணிகரை ஒத்துத் தோன்றா நிற்கும். அம்மருத நிலத்தைச் சூழ்ந்த சோலைகள் தேவரது தெய்வத் தன்மை வாய்ந்த கங்கையை வாய்மடுப்பது போல வளர்ந்தெழுந்து ஓங்காநிற்கும். ‘தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய’ என்னும் உரையை எண்ணுக. கலிநிலைத் துறை கொண்டல் உகுக்கும் ஆலி நிகர்ப்பக் குளிர்பாளை விண்டு முகைக்கும் பைங்கமு கெங்கும் விளையாட்டு வண்டலர் கொங்கைக் கிடையிள நீர்மற் றவர்காணா தண்ட மிசைக்கொண் டெய்தி யளிக்கும் வளர்தெங்கு. 112 | பசிய பாக்கு மரங்கள் எவ்விடத்தும், மேகங்கள் சிந்தும் மழைத் துளிகளை ஒப்பக் குளிர்ந்த பாளை வாய்விட்டுக் காய்களைத் தோற்றுவிக்கும். விளையாட்டு மகளிர் கொங்கைக்குப் புறங்கொடுத்த இளநீர்க் காய்களை அம்மகளிர் கூட்டம் காணாதவாறு வானிடத்து வைத்துக் காக்கும் வளர் தென்னை மரங்கள். |