கலிநிலைத் துறை நரம டங்கலின் நாரண னுந்திருக் காஞ்சியை விரவி நாரசிங் கேச்சர வேந்தை நிறீஇயினான் பரவி ஏத்தினன் வெவ்வினை நீத்தருள் பற்றினான் உரவு நீருடை அத்தலம் உத்தம மாகுமால், 13 | நரசிங்க வடிவில் திருமாலும் திருக்காஞ்சியை அடைந்து நாரசிங்கேசப் பெருமானைத் தாபித்தனர்; பரசித்துதித்தனர். உயிர்களை வருத்திய பாவந் தீர்ந் திறைவனருளைப் பெற்றனர். ஊர்தலையுடைய நீர் சூழ்ந்த அத்தலம் சிரேட்டமுடையதாகும். வராகேச்சர வரலாறு வாரா கேச்சரம் அன்னதன் தெற்கது மன்னுபொற் பேரான் றன்னொடு தோன்றிய பொன்விழிப் பேரினான் பார்தான் வௌவினன் பாதலத் தேகலும் பைந்துழாய்த் தாரான் சூகர மாய்அவன் றன்னைச் சவட்டியே. 14 | வராகேச்சரம் நரசிங்கேசத்தின் தெற்கிலுள்ளது. நிலைபெறும் பெயருடைய இரணியன் தன்னுடன் பிறந்த இரணியாட்சன் பூமியைக் கைப்பற்றிக் கொண்டு பாதலம் புகுதலும் பசிய துளவ மாலையைத் தரித்த திருமால் வராக அவதாரங் கொண்டவனை அழித்து, முன்போற் பாரைக் கொணர்ந்து நிறீஇமதம் மூண்டுழிக் கொன்பாய் ஏற்றவன் வேடுருக் கொண்டுயிர் உண்டொரு வன்பார் கோடு பிடுங்கி அணிந்தபின் மற்றவன் அன்பால் ஈசனை அர்ச்சனை செய்தருள் பெற்றதே. 15 | பண்டு போலப் புவியைக் கொண்டு வந்து நிறுவிச் செருக்குற்று உலகிற்குக் கேடு செய்தவழி அச்சந்தருகின்ற வடிவையும் பாய்ந்து செல்லுதலையும் உடைய விடைப்பெருமானார் வேட்டுவ வடிவங்கொண்டு சென்று பன்றியைச் செகுத்ததன் கொம்புகளைப் பறித்தணிந்தபின் அம்மால் வராக வடிவில் அன்பொடும் சிவபிரானை அருச்சனையாற்றி அருள் பெற்றது அத்தலம். நாரசிங்கேசப் படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம்-1318. |