அந்தகேசப் படலம் கலிநிலைத் துறை தாரார் கொன்றையன் நாரசிங் கேச்சரந் தன்னொடு வாரா கேச்சர மேன்மை தெரிந்து வழங்கினாம் ஏரார் கின்ற இதன்குண பாங்கர் எறுழ்வலிப் போரான் ஏற்றவர் அந்தக ஈச்சரம் போற்றுவாம். 1 | ஆத்தி, கொன்றை இவற்றின் மாலையை அணிந்த நரசிங்கேசப் பெருமானார் வரலாற்றொடும் வராகேச்சரத்தின் பெருமையை ஆராய்ந்து உபகரித்தோம். அழகு பொருந்திய இத்தலங்களின் கிழக்கில் பெருவன்மையையுடைய போர்வல்ல இடபவாகனத்தையுடையவர் தம் அந்தகேச்சரத்தைப் போற்றுவோம். இரணி யாக்கன் அளித்திடும் அந்தகன் என்பவன் மரபின் எந்தையை ஆயிடை ஏத்தி வரம்பெறூஉ முரனை அட்ட பிரான்முதல் விண்ணவர் யாரையும் உரனில் வென்று புறக்கொடை கண்டுல காண்டனன். 2 | இரணியாட்சன் ஈன்ற அந்தகாசுரன் விதிப்படி எமது பெருமானை அங்கு வழிபாடியற்றி வரம்பெற்று முரன் என்னும் அசுரனை அழித்த முரரிரி முதலான தேவர் யாவரையும் வன்மையால் வென்று புறங்கொடுப்பக் கண்டு உலகை ஆட்சி செய்தனன். தேவர்கள் பெண்வடிவங் கொண்டு வசித்தல் அன்ன தானவ னுக்கழி வெய்திஅச் சத்தினால் பொன்ன வாம்மரு மத்தவ னாதிப்புத் தேளிர்தாம் மின்னி டைக்கு நடுக்கம் விளைத்திறு மாந்தணி மன்னு பூண்முலை யார்வடி வத்தை எடுத்தரோ. 3 | அந்தகாசுரனொடு பொருது வன்மையை இழந்து அச்சத்தினால் இலக்குமி விரும்புகின்ற மார்பினனாகிய திருமால் முதலானோர் மின்னை ஒக்கும் இடைக்கு வருத்தம் விளைத்து நிமிர்ந்து அழகு மிகுந்து ஆபரணங்களை அணிந்த கொங்கையையுடைய மகளிர் வடிவத்தை மேற்கொண்டு, கொள்ளி வட்டம் எனச்சகம் எங்கணுங் கொட்புறீஇ வெள்ளி யங்கயி லைக்கிரி மேவினர் முத்தலை அள்ளி லைப்படை அங்கண னாரருள் பெற்றவண் வள்ளி மாமி கணங்களி னோடும் வதிந்தனர். 4 | |