402காஞ்சிப் புராணம்


     உலகிற் பலவிடங்களிலும் கொள்ளி வட்டம் போலச் சுழன்று திரிந்து
புகலாக வெள்ளிமலை எனப்பெறும் கயிலை மலையை மேவி முத்தலைச்
சூலமும், கண்ணோட்டமும் உடைய சிவபெருமான் கருணையைப்
பெற்றவ்விடத்தில் வள்ளி நாயகியார் தம் மாமியாராம் உமையம்மையார்
கணங்களொடுந் தங்கினர்.

இன்ன வாறுபல் காலம் அகல்வுழி எம்பிரான்
மன்னு தாரு வனத்துறை மாதவர் தங்களைத்
துன்னி மையல் கொளீஇ அவர் உண்மைசோ தித்திடும்
அன்ன செய்கை நினைந்தவண் எய்தினன் அவ்விடை.   5

     இங்ஙனம் நெடுங்காலம் கழிந்தவழி எமது பெருமானார் பெருமையுறும்
தாருகவனத்தில் வாழ்கின்ற பெருந்தவர்களை நெருங்கி மயக்குறுத்தி அவர்
இயல்பினை அவர் தாம் உணரச் செய்யும் திருவிளையாடலை எண்ணி
ஆங்கெய்தினர்; அப்பொழுது,

     ஆராய்ந்தறிதலும், ஆராய்ந்து மறிய இயலாமையும் உயிரியல்பு;

அந்த காசுரன் விண்ணவர் வெள்ளி அடுக்கலின்
வந்து பெண்மைய ராகி மறைந்துறை செய்திகேட்
டுந்து சீற்றம் மிகுத்தவண் எய்தி உடற்றுழி
முந்தும் அம்பிகை தன்அருள் பெற்று முகுந்தனார்.   6

     தேவர் பெண் வடிவினராய் வெள்ளி மலையிற் சென்று மறைந்து
வாழும் செய்கையை அந்தகாசுரன் கேட்டு வெளிப்படுகின்ற வெகுளி மிக்குக்
கயிலையை அடைந்து போர் செய்கையில் அம்பிகையார் தம் முற்படும்
அருளைப் பெற்றுத் திருமால்,

எண்ணில் பெண்டிர் தமைப்படைத் தேயினர் அத்தடங்
கண்ணி னார்க்கிடை கண்டகன் ஓடின னாகமற்
றண்ண லார்உறு வோர்அமர் தாரு வனத்திடை
நண்ணி அங்கண் நடாத்திய செய்கை நவிற்றுவாம்.   7

     மகளிர் அளவிலரைச் சிருட்டித்துப் போர்மேற் செலுத்தினர். அகன்ற
கண்களையுடைய மகளிர்க்குத் தோற்ற முட்போன்ற அசுரன் புறங்
கொடுத்தோடினன் ஆக, இனிச் சிவபிரானார் முனிவரர் இருக்கின்ற
தாருவனத்தினை நண்ணி அங்குநிகழ்த்திய திருவிளையாடலைக் கூறுவோம்.

     கண்டகம்-முள்; முட்போன்ற கொடுமையன் என்பது பொருள்.

பிட்சாடனர் திருவிளையாடல்

கொச்சகக் கலிப்பா

கழல்கறங்கப் பலிக்கலனுங் கரத்தேந்திப் பலபரிதி
மழகதிரின் வரும்பெருமான் துடிமுழக்கஞ் செவிமடுத்துக்
குழல்இசைகேட் டருகணையும் அசுணமெனக் குளிர்தூங்கிப்
பழிதபுதா பதமடவார் பலிகொண்டு மருங்கணைந்தார்.    8