திருவடிமேல் வீரக்கழல் ஒலிக்கப் பிட்சா பாத்திரத்தைத் திருக்கரத்தில் தாங்கிச் சூரியர் பலர் தம் இளங்கதிரொளி போல வருகின்ற பெருமான் துடி ஒலியைச் செவி தேக்கவுண்டு புல்லாங்குழல் இசையைக் கேட்டு மகிழ்ந்து நெருங்கும் அசுணப் பறவை போலும் மகிழ்ச்சி மிக்கு கற்புடைய முனிவரர் மனைவியர் பிச்சை கொண்டு நெருங்கினார். பழிதபுதல்-புகழ் பெறல்; நிலவலர்ந்த நகைமுகிழ்க்கும் மணிவாய்க்கும் நெடுஞ்சூலத் தலைகிடந்த திண்தோட்கும் தடமார்பின் அழகினுக்கும் மலைமடந்தை கரஞ்சேப்ப வருடும்இரு குறங்கினுக்கும் கலைநுடங்க வருமடவார் கண்மலர்இட் டிறைஞ்சினார். 9 | ஒளி மலர்ந்த புன்சிரிப்பு அரும்பும் அழகிய திருவாய்க்கும், நீண்ட முத்தலைச் சூலம் கிடந்த திண்ணிய தோளிற்கும், பரந்த அழகிய மார்பினுக்கும், உமையம்மையார் திருவிரல்கள் சிவப்பத் தைவரும் இருதுடைக்கும் மேகலை சரியவருகின்ற மகளிர் கண்ணாகியமலரைச் சாத்தி வணங்கினார். கள்ளுடைய மலர் என்பது நயம். வைத்த கண் வாங்காமல் நோக்கினர் என்பார் இட்டு என்றனர். ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ (கம்ப. பால. உலா. 19) என்னும் செய்யுளை நினைவு கூர்க. கண்மலரை எம்மானார் திருமேனி கவரஅவர் பண்மலரும் வாய்மலரும் பனிமலரும் முகமலரும் தண்மலரும் விழிமலரும் தாள்மலரும் கைமலரும் விண்மலரும் மின்னனைய விளங்கிழையார் எதிர்கவர்ந்தார். 10 | மகளிர்தம் கண்மலர்களைப் பிட்சாடனர் தம் திருமேனி வசீகரித்துக் கொள்ள அப்பெருமானார் பண்ணுடைய பாடல் வெளிப்படுகின்ற வாய்மலரையும், குளிர்ச்சி பரவுகின்ற திருமுக மலரையும், அருள் மலர்கின்ற திருக்கண் மலரையும், திருவடி மலரையும், கைம்மலரையும் விண்ணிற் றோன்றும் மின்னலை ஒக்கும் விளங்குகின்ற அணிகளையுடைய மகளிர் எதிராகக் கவர்ந்தனர். எம்பிரான் திருமேனி உளமுழுதும் இடங்கொள்ள நம்பியநாண் முதல்நான்குந் துச்சிலர்போற் புறம்நடப்பக் கொம்பனையார் கள்ளுண்டு களித்தோரின் இருமருங்கும் பம்பினார் ஆடினார் பாடினார் என்செய்வார். 11 | எம்பிரானுடைய திருமேனி அறிவு முழுதையும் கைக்கொள்ளவும், வேறோர் நினைவிலராய் விரும்பிய நாண முதலிய நான்கும் ஒதுக்குக் குடியிருப்போர் போலப் புறத்துச் செல்லவும், பூங்கொம்பு போல்வார் கள்ளையுண்டு மயங்கினோரின் இருபுறத்தும் செறிந்தனர்; ஆடினர்; பாடினர்; வேறு என்செய்வார். ‘‘உடம்பினுள், துச்சில் இருந்தஉயிர்க்கு.’’ (திருக். 340) |