தண்ணறுஞ்சந் தனந்தீயத் தரளவடம் நீறாகக் கண்ணெகிழ்பூந் தொடைமூசுங் களிவண்டி னொடுங்கருக எண்ணரிய காமத்தீ யிடைக்குளித்தார் புரம்பொடித்த அண்ணல்இள நகைபோலும் அடிகள்இவர் நகைஎன்பார். 12 | மட்டித்த குளிர்ந்த நறிய சந்தனச் சேறு புலரவும், முத்தமாலைகள் நீறுபடவும், தேனொழுகும் பூமாலை மொய்க்கும் களிப்புடைய வண்டுகளுடன் கரியவும், நினைக்கவும் இயலாத காமாக்கினியில் மூழ்கின மகளிர் முப்புரத்தைச் சிரித்தெரித்த தலைவர் புன்சிரிப்பினை ஒத்து அடிகளார் நகையும் (புரம்) உடம்புகளைச் சுடுகிறது என்று கூறுவர். வழுவும்உடை கரத்திடுக்கிக் கொணர்ந்தபலி இடமாட்டார் தொழுதகையார் பனந்தாளின் அணிந்தருளத் தொடைஏந்தி எழுமவளின் மறுகுவார் எம்பிரான் கடைக்கணிப்ப முழுதருள்பெற் றுய்ந்தேம்என் றகம்மலர முகம்மலர்வார். 13 | சோர்கின்ற உடையை இருமுழங்கைகளாலும் இடுக்கிக்கொண்டு கையிற் கொணர்ந்த பிச்சையை இட (உயர்த்தக் கூடாமையால்) மாட்டாராய்த் திருப்பனந்தாள் என்னுந் தலத்தில் தொழு தகையார்க்குச் சாத்தாப்பூ மாலையை ஏந்தி ஊக்கும் அவ்வம்மையைப் போல வருந்துவார். எமது பெருமான் கடைக்கண்ணால் நோக்க ‘முழுதருளும் பெற்றுப் பிழைத்தேம்’ என்றுள்ளம் மலர முகமலர்ச்சி அடைவார். திருப்பனந்தாளில் தாடகை யென்னும் மாதொருத்தி சிவபிரான் பூசனையில் மாலை சாத்தப் புகுமளவில் உடை நெகிழ இருமுழங்கைகளாலும் அதனை இடுக்கிய போது பெருமானார் திருமுடியைச் சாய்த்து அம்மாலையை ஏற்றனர். அவ்வருளை வெளிப்படுத்திய வடிவில் வளைந்திருந்த சிவலிங்கத் திருமேனியைச் சோழ அரசனின் மனங்களிப்பக் குங்குலியக் கலயர் நிமிர்த்திய வரலாற்றைப் பெரிய புராணத்திற் காண்க. தக்கபலி கொளவந்தீர் தனப்பிச்சை தருகின்றேம் கைக்கொடுபோம் இதோவெனமுன் உரம்நெளிப்பார் கழிகாமம் மிக்கயாங் களும் நீரும் வெற்றரையேம் ஆயினமால் இக்கிடந்த துகில்நுமதோ எமதோசொற் றிடும் என்பார். 14 | ‘சிறந்த பிச்சையைக் கொள்ளுதற்காக வந்தீர்; தனப்பிச்சையைக் கொடுக்கின்றேம். கையிற் கொண்டு போமின் இங்குள்ளன என மார்பை வளைத்துக் காட்டுவார். மிக்க காமம் மேலும் மிகுந்த யாங்களும் நீரும் நிருவாணரேம் ஆயினம் ஆகலின், இங்குக் கிடந்த ஆடை நும்முடையதோ எம்முடையதோ கூறுமின் என்று கூறுவர். பெருமானார் திகம்பரராய் எழுந்தருளினர். தனம், செல்வம், கொங்கை. |