எம்மல்குற் கும்மல்குல் இணையொக்கும் போலும்அது செம்மலீர் உடன்சேர்த்தித் தெரிதும்என அருகணைவார் வெம்முலைவா ரணம்எங்கள் இடைக்கீறு விளையாமே நும்முகிர்த்தோட் டியின் அடக்கின் அறன்உண்டு நுமக்கென்பார். 15 | ‘எம்முடைய அல்குலுக்கும் உம்மல்குலுக்கும் ஒப்பு நேராதல் கூடும். தலையாய பண்பினீர்! அதனை இணைத்துத் தெரிந்துகொள்வேம்’ என நெருங்குவார். கொடிய முலைகளாகிய யானைகள் எங்கள் நடுவிற்கு இடையூற்றை விளையாதபடி நும்முடைய நகங்களாகிய அங்குசத்தினால் அடக்கினால் நுமக்குப் புண்ணியம் உண்டாகும்’ என்றனர். அல்குல், பிருட்டபாகம், மத்தகமும், கோடும் பற்றிய உருவகம். மன்றநீர் இரந்தபலி யாமளித்தேம் மற்றியாங்கள் ஒன்றிரந்த தளியாக்கால் இகழன்றே உமக்கென்பார் இன்றெனினும் விடுவேமோ ஈர்ங்கணைவேள் பறந்தலைக்கண் சென்றுபெரும் போர்விளைத்தும் வளைமின்எனத் தெழித்தெழுவார். 16 | ‘நீவிர் விரும்பிய பிச்சையை நிச்சயமாக யாங்கள் அன்பொடும் கொடுத்தோம். யாங்கள் வேண்டிய ஒன்றனைப் பிரதி உபகாரமாகக் கொடாத வழி உமக்குப் பழிப்பன்றோ? என்று கூறுவர். ‘நீ கொடே’னெனினும் உன்னைப் போக விடுவேமோ? தேனால் ஈரிய மலரம்புகளையுடைய மன்மதனின் போர்க்களத்தில் (மண்டி) மேற் சென்று போரைச் செய்வேம் வளைத்துக் கொள்ளுமின்’ என்று உரத்துப்பேசி விரைவார். ‘சுற்றுமின்; சூழ்மின்; தொடர்மின்; விடேன்மின்; பற்றுமின்’ என்பன நினைக. மகளிர் மன்மதன் சேனையாகலின் போர் முறை கூறினர். யாங்கொணர்ந்த பலியோடும் எம்முடைய வளைஆழி பூங்கடிஞை யுறக்கொண்டீர் புனிதரே அவைஅளித்தால் ஆங்கிரந்த மாலார்க்கு வளைஆழி மீட்டளித்த வீங்குநீர்க் கலிக்கச்சி விநாயகர்ஒப் பீர்என்பார். 17 | யாம் கொணர்ந்து பெய்த பலியுடனே எம்முடைய வளையலையும் மோதிரத்தையும் பொலிவுடைய பிச்சைப் பாத்திரத்தில் விழக்கைப்பற்றினீர். விமலரே! அவற்றைத் திருப்பித் தந்தால் முன்னாள் யாசித்த திருமாலுக்குப் பாஞ்ச சந்நியமும், சக்கரமும் மீளத்தந்தருளிய பெருவெள்ளம் சூழ்ந்த கலிக்கச்சியில் வீற்றிருக்கும் வலம்புரி விநாயகரை ஒப்பீர் ஆவீர்’ என்று கூறுவார். சங்கு சக்கரங்களைத் திருமால் விநாயகரிடத்துப் பெற்ற வரலாறுகளை வலம்புரி விநாயகப் படலத்திலும், விடுவச்சேனேசப் படலத்திலும், அறிக. கலி-பெருமை, ஒலி, விளக்கம், தழைத்தல், பாம்பலதிங் கிஃதல்குல் பகடல்ல இவைகொங்கை கோம்பியல திதுநாசி கோளரியன் றிதுமருங்குல் ஏம்பலிக்கும் இவைதம்மைக் கோள்இழைப்ப எனவெருவிப் போம்பரிசு நினையாதீர் புல்லுமின்என் றடிதொழுவார். 18 | |