அந்தகேசப் படலம் 407


அவ்வண்ணந் தொழுதிரந்த அருள்முனிவர்க் கருள்கூர்ந்து
செவ்வண்ணத் திருமேனிச் சிவபிரான் இதுகூறும்
இவ்வண்ணம் வேண்டுதிரேல் எழிற்காஞ்சி நகர்வயின்போய்
மெய்வண்ன நாற்குலத்தும் தோன்றி அவண் மேவுதிரால்.    22

     அவ்வாறு தொழுது வேண்டிய அன்புடைய முனிவரர்க் கருள் சுரந்து
சிவபெருமான் இதனை அருளுவர். ‘முத்தியை வேண்டுவீராயின் அழகிய
காஞ்சிமா நகர்க்கண் நால்வகை வருணத்தும் நற்குடிகளில் தோன்றி
அவ்விடத்தே வாழுதிர்.!’

     ‘சிவனெனு நாமந் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்’ ஆகலின்
‘செவ்வண்ணத் திருமேனிச் சிவபிரான்’ என்றனர்.

அறுசீரடி யாசிரிய விருத்தம்

பற்றறத் துறந்தோர் பற்றுட் பட்டவ ரேனும் ஞானம்
பெற்றவர் மடவ ரேனும் பெரும்பன்றி கழுதை ஞாளி
புற்றாரப் புல்லுப் பூடு புழுமர மேனுங் காஞ்சி
நற்றலத் திறுதி கூடின் நம்அடி கலப்ப துண்மை.      23

     ‘இருவகைப் பற்றும் அற்றவ ரெனினும், உற்றவரெனினும், ஆக,
அறிவுடையரெனினும், அறிவிலரெனினும், பன்றி, கழுதை, நாய், இவைகளே
ஆக, புற்றில் வாழ் பாம்பு, புழு இவைகளும் ஆக, புல், சிறுசெடி, மரங்களே
ஆகக் காஞ்சியாகிய நல்ல தலத்திடை உயிர் நீங்கப் பெறின் இறப்பராயின்
நம்முடைய திருவடியைத் தலைப்படுதல் சத்தியமாகும்! 

தேவதாருவன முனிவர் காஞ்சியிற் பிறத்தல்

ஆதலின் அங்கண் இல்லாற் றொழுகிவீ டடைமின் என்னக்
காதலின் வணங்கிப் போற்றிக் கடும்பொடும் பிருகு வாதி
ஏதமில் நாற்பத் தெண்ணா யிரவருங் காஞ்சி நண்ணிக்
கோதரு மரபின் ஆன்ற நால்வகைக் குலத்துந் தோன்றி.    24

     ‘ஆதலின், அக்காஞ்சியில் இல்லற நெறியில் நின்று முத்தியை
அடைமின்’ என்றருள விருப்பொடும் வணங்கிப் பரவுதல் செய்து சுற்றஞ்
சூழப் பிருகு முனிவரர் முதலாம் குற்றமற்ற நாற்பத்தெண்ணாயிரவரும்
காஞ்சியை நண்ணிக் குற்றமற்ற வழி வழி அமைந்த நால்வகைக்
குலங்களினும் வந்து பிறந்து,

     தாய் மரபு தந்தை மரபாகிய‘‘இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி’’
வழிவழி அடிமை செய்யும் என்பன காண்க.

மெல்லிதழ் நறுமென் போதால் விதியுளி வெவ்வே றன்பின்
அல்லுறழ் மிடற்றுப் புத்தேன் அருட்குறி அருச்சித் தேத்தி
நல்லன வரங்கள் பெற்று நாயகன் அருளால் அங்கண்
இல்லற நெறியின் மன்னி வாழ்ந்தனர் இனைய நீரால்.    25