408காஞ்சிப் புராணம்


     வேறு வேறாக அன்பொடும் இருளொடு மாறுபடும் திருநீல கண்ட
முடைய சிவலிங்கப் பெருமானைத் தாபித்து நறிய மெல்லிதழ் கொண்ட
மென்மலர்களால் முறைப்படி அருச்சித்துத் துதித்து நல்லனவாகிய வரங்களை
இறைவன் திருவருளாற் பெற்றவ்விடத்தே இல்லற நெறியில் நிலைநின்று
வாழ்ந்தனர். இவ்வியல்பினால்,

எல்லைதீர் காஞ்சி யுள்ளார் யாவரும் முனிவர் அங்கண்
கல்லெலாம் இலிங்கம் சீதப் புனலெலாங் கங்கை சொல்லுஞ்
சொல்லெலாம் மனுக்கள் கைகால் தொழிலெலாம் விடையோன் ஏவல்
செல்லலாந் தகைத்தன் றம்ம தென்திசைக் கிழவற் கவ்வூர்.     26

     வரையறை தவிர்ந்த சிறப்பினையுடைய காஞ்சியில் உள்ளவர் யாவரும்
முனிவரர் ஆவர். அவ்விடத்துள்ள கல்லெல்லாமும் சிவலிங்கம் ஆகும்.
குளிர்ந்த நீர் நிலைகள் யாவும் கங்கையாகும். காஞ்சியில் பேசப்பெறும்
சொற்கள் யாவும் மந்திரங்கள்; தொழிலெலாம் அருட்பணிக்குரியவை,
இங்ஙனம் ஆதலின், நரகம் புகுவாரின்மையின் இயமன் அங்கு வாழ்வாரை
நோக்கிச் செல்லுதற்குரிய வாய்ப்பிலது.

     அம்ம, வியப்பிற்று.

அந்தகாசுரன் முத்தியடைதல்

அருந்தவக் கிழவர் தங்கள் செயல்அது வாக இப்பால்
பெருந்தகை கயிலை நண்ணிப் பிராட்டியோ டமர்ந்தான் அங்கண்
திருந்திழை மகளிர் கோலங் கொண்டுறை திருமா லாதி
இருந்திறற் சுரரும் போற்றி மருங்குற இருக்கும் ஏல்வை.    27

     செய்தற்கரிய தவ முனிவரர் செய்கை அவ்வாறாக, இனிப் பெருமானார்
திருக்கயிலையைச் சேர்ந்து பிராட்டியாரோடும், வீற்றிருந்தனர். அங்குத்
திருந்திய அணிகளைப் பூண்ட மகளிர் வடிவங்கொண் டுறைகின்ற
திருமாலாதி பெருவலியுடைய விண்ணோரும் போற்றி செய்து சூழ இருக்கும்
பொழுதில்,

தனைப்புறங் கண்ட மின்னார் தமைப்பற்றி வருதும் என்னும்
மனத்தருக் குய்ப்ப மீட்டும் அந்தகன் வருதல் காணூஉப்
புனத்துழாய்ப் புத்தேள் முன்னர்ப் போற்றிவிண் ணப்பஞ் செய்ய
வினைத்தொடக் கறுக்கும் எங்கோன் வயிரவன் றனைவி டுத்தான். 28

     முன்னர்த் தன்னைப் புறங்காட்டி ஓடச்செய்த மின்னொக்கும் தேவ
மகளிரைக் கைப்பற்றிக் கொண்டு போவான் உள்ளத்துத் தோன்றிய செருக்குச்
செலுத்த அந்தகாசுரன் மீளவும் வருதலைக் கண்டு திருமால், சந்நிதியில்
போற்றி முறையிட வினைத்தளையை அறுக்கும் எமது பெருமான் வயிரவத்
தோன்றலை எதிர் விடுத்தனர்.

     புனத்துழாய்-முல்லை நிலத்துக்குரிய துளசி. முத்தலைச் சூலத்தனுபவம்
பெற்றபின் ஞானத்திற்குரியன் அந்தகன் ஆகலின் ‘வினைத் தொடக்கறுக்கும்
எங்கோன்’ என்றனர்.