அந்தகேசப் படலம் 409


வயிரவன் படையோன் முன்னாம் வானவர்க் கிடுக்கண் செய்வான்
வயிரவன் துடியன் சேனை வலத்தவ னாகிப் போந்த
வயிரவன் மனத்தான் றன்னைப் பொருதுவண் சூலத் தேந்தி
வயிரவன் களிப்பு மிக்கு வாகையின் நடனஞ் செய்தான்.      29

     வலிமை அமைந்த வச்சிராயுதத்தை யுடைய இந்திரன் முதலாம்
தேவர்க்குத் துன்பம் செய்யும் பொருட்டு ஊது கொம்பினையும், வலிய
உடுக்கையினையும் உடையனாய்ப் படை வலியுடன் வந்த கறுவு
கொண்டிருந்த வலிய மனத்தினனாய அந்தகாசுரனை வயிரவமூர்த்தி
பகைத்துப் பெரிய சூலத்தில் குத்தி ஏந்திக் களிப்பு மிகுந்து வென்றிக்
கூத்தாடினர்.

அந்தகற் கருளால் உண்மை அறிவுவந் துதிப்ப அன்னோன்
கொந்துமுத் தலைச்சூ லத்திற் கோப்புண்டு கிடந்த வாறே
கந்தமென் மலர்த்தாள் போற்றித் துதித்தலுங் காரிப் புத்தேள்
மைந்தயாம் மகிழ்ந்தாம் வேட்ட வரம்இனிப் புகறி என்ன.  30

     அந்தகாசுரனுக்குத் திருவருளால் மெய்யறிவு தோன்றக் குத்திக் கோத்த
முந்நுதியுடைய சூலப்படையிற் கிடந்தபடியே நறுமணங்கமழும், மலர்போலும்
திருவடிகளைப் போற்றி செய்து துதித்தபோது, வயிரவர், ‘மைந்தனே! யாம்
மகிழ்ந்தோம், விரும்பிய வரத்தை இப்பொழுது கூறுதி என்று கூற,

தானவன் முத்தி ஒன்றே தந்தருள் என்றான் அற்றேல்
கோனருள் பெற்றுக் காஞ்சி குறுகுவாம் என்று நண்ணி
ஆனுடை ஊர்தி அண்ணல் அருளினால் தனது காப்பாம்
மாநகர் எய்திச் சூல வைத்தலைக் கிடந்தான் றன்னை.   31

     அசுரன் ‘முத்தியே தந்தருள்க’ என்றனன். ‘அதுவேண்டின் இறைவன்
கட்டளையைப் பெற்றுக் காஞ்சியை அணுகுவோம்’ என்று விடையூர் பரமன்
அருள் பெற்றுக் கயிலையை விடுத்துத் தனது காப்பிற் பொருந்தும் காஞ்சி
மாநகரையடைந்து சூல நுனியிற்கிடந்த அத்தானவனை,

தெறும்புரம் எரித்தார் கம்பம் திகழ்சிவ கங்கைத் தீர்த்த
நறும்புனல் மூழ்கு வித்துத் திருவருள் நல்கிப் பாசக்
குறும்பறுத் தளித்தான் தண்டக் குரிசில்அந் தகனும் தன்பேர்
உறும்பழ இலிங்கத் துள்ளாற் கரந்தனன் ஒருமை பெற்றான்,   32

     வருத்துகின்ற முப்புரங்களைச் சிரித்தெரித்த பெருமானாரது
திருவேகம்பத் தலத்தில் விளங்குகின்ற சிவகங்கையில் மூழ்குவித்துத்
திருவருளை வழங்கிப் பாசக்கொடுமையை அறுத்தருளினர் வயிரவர்.
அந்தகாசுரனும் தன் பெயரான் விளங்கும் பழைய சிவலிங்கத்தினில்
மறைந் தொன்றாயினன்.

அந்தகேசப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் - 1350