திருநாட்டுப்படலம் 41


செற்றெயில் வென்றார் தேர்மிசை மேற்போக் கெனமென்பூத்
துற்ற பொதும்பர்த் துறையின் இனத்தாற் செருவேற்றுப்
பற்றிய வாவி நீங்குபு பைந்தேன் அடைகீறி
உற்றெழு வாளை பொருதுயிர் விண்டார் கதிகாட்டும்     113

     பகைவரது மதிலை அழித்து வென்றவர் தம் தேரின் விதானம் என
மெல்லிய பூக்கள் நெருங்கிய சோலை உடுத்த நீர்த்துறையில் இனத்தோடு
போரேற்றுக் கைப்பற்றிய பொய்கையை நீங்கிப் பசிய தேனடையைக் கீறி
மிக்கெழுந்த வாளைமீன் போர்செய்து இறந்து வீரசுவர்க்கம் புகுவோர்
நிலைமையைக் காட்டும். போரில் இறந்தோர் சூரிய மண்டலத்தைப் பிளந்து
சுவர்க்கம் செல்லல்: ‘கதிருடல் வழிபோய்க் கல்லுழை நின்றோர்’ (கல்)
‘செங்களம்பட், டொண்பருதி உடல்கிழித் தோடும் கடற்றானை ஒளிறுவா
ளவுணர் குழுவும்’ (முத்து-சப்-3) மேற்போக்கு-மேற்கட்டி.

போதுகள் மேய நெடுங்கய மேவு புனிற்றுக்கார்
மேதியை ஆயிடை வாளை வெகுண்டு விசும்பேறிப்
பாதி வெரிந்புறம் உட்குழி யக்குதி பாய்ந்தாடி
மீதுயர் திண்கரை யேற உகைக்கும் வியப்பிற்றால்.    114

     மலர்களை மேய்வதற்கு நெடிய நீர்நிலையில் இறங்கிய ஈன்றணிய
கரிய எருமையை அவ்விடத்துள்ள வாளைமீன் வெகுண்டு வானிற் றாவி
அவ்வெருமை முதுகு பாதி குழிபடக் குதித்து அவ்வெருமை துள்ளி
மேலுயர்ந்த திண்ணிய கரையை ஏறச் செலுத்தும் வியப்பினது.

     வெரிந்புறம்-முதுகு; ஒரு பொருட் பன்மொழி.

சுவைஒளி ஊறொலி நாற்றமெ னைந்தின் தொடர்பற்றிக்
கவர்படு நெஞ்சில் திரைதிரை தோறுங் கடைநீர்நாய்
துவள எழும்பா முறைமுறை கீழ்நீர்ச் சுழல்காட்சி
எவரும் இறும்பூ துறவுள வேரித் தடமெங்கும்.      115

     சுவைஒளி ஊறு ஒலி நாற்றம் என்று சொல்லப்பட்ட ஐம்புலன்களின்
தொடர்பு பற்றிப் பிளவுபட்ட மனம்போல, அலைகள் அலைக்குந்தோறும்
திரிக்கப்பட்ட நீர் நாய் துவண்டு எழும்பி முறைமுறையே நீர்க் கீழ் சென்று
வாசமமைந்த தடாகமெங்கும் சுழலும் காட்சியானது, எவரும் வியப்புற உள்ளது.

     கீழ்நீர், முன் பின்னாகத்தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை, ஏரித்தடம்
என்னின் இருபெய ரொட்டுப் பண்புத்தொகை.

கரைத்துறு தண்பூங் காஞ்சிகள் சாகைக் கரம்ஓச்சி
விரைத்த கரும்பைத் தைவரு தோற்றம் விரிதார்வண்
டிரைத்தெழு திண்டோள் கேள்வரொ டூடும் இளையார்மேல்
நிரைத்தமர் செய்வான் வேள்சிலை பற்றும் நிகழ்விற்றால்   116