410காஞ்சிப் புராணம்


வாணேசப் படலம்

கலி விருத்தம்

அறம்பயில் காஞ்சியின் அந்தகேச்சரத்
திறஞ்சிறி தறிந்தவா செப்பி னாம்இனிப்
பிறங்குசீர் அத்தளிக் குணாது பேதுறாப்
பறம்புவில் உழவர்வா ணேசம் பன்னுவாம்.         1

     அறம் திகழ்கின்ற காஞ்சி நகரில் அந்தகேசத்தின் இயல்பினை
அறிந்தபடி சிறிது கூறினோம். இனி, விளங்குகின்ற சிறப்பினையுடைய
அந்தகேசத் திருக்கோயிலுக்குக் கிழக்கில் மாறுபடாத மேருமலையைக்
கோட்டிய வில் வீரர்தம் வாணேசத் தலத்தினைக் கூறுவாம்.

     ‘தருமம் பிறழாத சத்ததானம்’ என முன்னும் வந்தது. அம்மையார்
முப்பத்திரண்டறங்கள் வளர்த்தற்கிடனென்க.

வாணன் வரம்பெறல்

எறுழுடை வாணன்என் றியம்பு தானவன்
தெறுவினைக் காஞ்சியின் அருட்சி வக்குறி
நிறுவினன் அருச்சனை நிரப்பி மாதவம்
உறுவரின் உஞற்றினான் உலப்பில் காலமே.        2

     வலிமையையுடைய வாணன் என்னும் அசுரன் தீவினையைக்
கெடுக்கின்ற காஞ்சிமாநகரில் சிவலிங்கந் தாபித்துப் பூசனையை முற்றுப்
பெறச் செய்து முனிவர்போலப் பெருந்தவத்தை அளவிறந்த காலஞ்
செய்தனன்.

அன்பினுக் கெளிவரும் அழகன் ஆங்கவன்
முன்புறத் திருநடம் முயலக் கண்டனன்
என்புநெக் குருகநின் றேத்தி னான்நந்தி
தன்பெருங் கணத்தொடு முழவு தாக்கினான்.        3

     அரியனாயும் அன்பருக் கெளியனாம் அழகன் அவன் முன்னர்த்
திருநடம்புரியக் கண்ட வாணன் என்பும் குழைய மனம் ஒன்றி உருகித்
துதித்தனன். திரு நந்தி கணங்களொடும் குடமுழவமும் முழக்கினான்.

     ‘அருமையில் எளிய அழகே போற்றி’ (திருவா.)

குடமுழ விருகரங் குலுங்கத் தாக்குதோ
றடர்பெருங் கருணைகூர்ந் தடிகள் ஆயிரந்
தடநெடுங் கரம்பெற நல்கித் தானவ
விடலைநீ வேட்டது விளம்பு கென்றலும்.          4