வாணேசப் படலம் 411


     குடமுழவை இருகரங்களாலும் அதிரத் தாக்குதோறும் செறிபெருங் கருணை வெளிப்பட்டிறைவனார் ஆயிரம் நீண்ட பெரிய கரங்களை
அவனுக்கு நல்கி ‘தானவவிடலையே! நீ விரும்பிய பொருளைக் கூறுக’
என்றருளலும்,

     விடலை: 16-பிராயத்திற்கு மேல் 30-ஆம் பிராயம் வரையிற் கூறப்படும்
ஆண்பாற் பருவப் பெயர்; (பன்னிருபாட்டியல் - 232.)

ஆயிர முளரிநீண் டலர்ந்த நீனிற
மாயிருங் குன்றுறழ் வாணன் தாழ்ந்தெழூஉத்
தீயழற் புரிசையும் திறலும் ஆக்கமும்
பாயமூ வுலகமும் பரிக்குங் கொற்றமும்.           5

     ஆயிரம் தாமரை மலர்கள் கொண்ட நீல நிறமுடைய மலையை
ஒத்த வாணாசுரன் பெருமானைப் பணிந்தெழுந்து பகைவரைச் சுடுகின்ற
நெருப்புமயமான மதிலும், வலிமையும், செல்வமும், பரந்த மூவுலகங்களையும்
தாங்குகின்ற வெற்றியும்,

ஓவரு நிலைமையும் உன்ன டித்துணை
மேவரு பத்தியும் வேண்டி னேன்ஒரு
மாவடி முளைத்தெழு வள்ள லேஎனக்
காவணி உடுத்தொளிர் கம்ப வாணனும்.           6

     ‘என்றும் நீங்காத இயல்பும், உன் திருவடிகளிற் பொருந்திய பேரன்பும்,
வேண்டினேன், ஒற்றைமாமரத்தின் மூலத்தில் தோன்றிய வள்ளலே!’ என்று
வேண்ட சோலைசூழ்ந் தழகு செய்யும் திருவேகம்பப் பெருமானாரும்,

அனையவை முழுவதும் அளித்து நீங்கினான்
புனைபுகழ் அசுரர்கோன் புவனம் யாவையும்
தனதடிப் படுத்தினன் தருக்கி வாழுநாள்
முனைவனைத் தொழூதெழக் கயிலை முன்னினான்.   7

     வேண்டிய வரங்கள் முழுவதும் வழங்கி நீங்கினார். புகழ்பூண்ட அசுரர்
தலைவனும் புவனங்கள் எல்லாவற்றையும் தன் ஏவலுட்படுத்துச் செருக்கிச்
செல்வக் களிப்பில் வாழுங்காலத்தில், எல்லாப் பொருட்கும் முன்னோனைத்
தொழுதலான் உயரக் கயிலையை அடைந்தான்.

நம்மைஆ ளுடையவன் நடன வேலையிற்
செம்மல்ஆ யிரமணிக் கடகச் செங்கையால்
தொம்மெனக் குடமுழா எழுப்பச் சூர்த்தகண்
கொம்மைவெள் விடையினான் கருணை கூர்ந்தரோ.  8

     நம்மை அடிமையாக உடைய பெருமான் திருக்கூத்தியற்றுகையில் அவுணர் தலைவன் கடகமணிந்த ஆயிரங் கைகளால் ‘தொம்மென’