வாணேசப் படலம் 413


என்னொடு போரெதிர்ந் திரியல் போயினார்
என்னரும் இனிமற்றென் புயக்கண் டூதியை
என்னுடைப் பிரானிடைத் தீர்ப்ப எய்தினேன்
என்னைநின் திருவுளம் இயம்பு வாயென.         13

     ‘என்னுடன் மாறுபட்டு எல்லோரும் கெட்டோடினர். இப்பொழுதென்
புயத்தெழுந்த தினவினை நும்மிடத்துத் தீர்க்க வந்தேன். நின் திருவுள்ளக்
கருத்தினைக் கூறுவாய்’ என்ன,

     என்னரும்-எத்திறத்தரும் எனினுமாம். ‘என்னரேயாயினும்’ (கந்த.
கயமுக.)

வெருவலன் எதிர்நின்று விளம்பக் கேட்டலும்
திருவடி விரல்உகிர் விழிசி ரிப்பினான்
மருவலர்க் கடந்தருள் மதுகை எம்பிரான்
குருநிலா நகைமுகிழ்த் திதனைக் கூறுமால்.        14

     நினைக்கவும் கூடாத ஒன்றை அஞ்சானாய் எதிர்நின்றுணர்த்தக்
கருவியின்றிக் கரும முடிப்பவர் அவன் பேதைமையை நோக்கி வெள்ளொளி
தவழப் புன்முறுவல் பூத்து வாய்மலர்வார்.

     இயமனை, இராவணனை, மலரவனை, மன்மதனை, முப்புரத்தைக்
கருவியின்றி அழித்தமையும், ‘‘வில்மதனை வென்ற தலர்விழியே ஒன்னார்
தம், பொன்எயில் தீமடுத்த தின்னகையே பூமிசையோன், தார்முடி கொய்தது
கூருகிரே ஆருயிருண், கூற்றுயிருண்ட தடித்தலமே ஏற்றான், பரசும்
பினாகமும் சூலமும் என்னே, கரமலர் சேப்பக் கொளல். (சிதம்பரச் செய்யுட்
கோவை-21,) என்னும் செய்யுளையும் எண்ணுக. இங்கே திருமால்
நிலைமையையும் (விடுவச்.6) எண்ணுக.

முதுதவப் பிருகுவின் சாப மொய்ம்பினால்
எதுகுலத் துதித்தெனக் கினிய னாகிய
புதுமலர்த் துளவன்நின் புயக்கண் டூதியைக்
கதுமெனப் போக்குவான் வருவன் காணெனா.      15

     ‘பிருகு முனிவர் சாப வலிமையைக் கடக்கலாற்றாது யது மரபிற்றோன்றி
எனக்கினியனாகிய கண்ணன் தினவை விரைவிற் போக்கும் பொருட்டு
வருவான் காணென்று,

     யது மரபில் வந்து யாதவனாய் ஆயர்பால் வளர்ந்தமை பற்றி ஆயர்
யாதவராயினர் என்க. புதுமை-வாடாமை முதலியன. ஏவல் வழி நின்ற
போரென்பார் இனியன என்றனர்.

தற்றொழு வான்றனைத் தான்செ குப்பது
நற்றிற மன்றென நாடி இவ்வணம்
சொற்றனன் திருவுளஞ் சுளித்தி யாவையும்
அற்றமில் அவன்அவள் அதுகொண் டாட்டுவான்.   16