களாப்பழம்போலும் கரிய கூந்தலினால் வருத்தித் தன்னை அழிக்க மனந்தளந்த பழைய பகை காரணமாக மன்மதனுடைய யானையாகிய இருள், விளங்குகின்ற அணிகளைப் பூண்ட உஷை முன்பு தன் ஆற்றலைப் புலப்படுத்தலால் இளங்கொடியை அடியில் அறுத்தாற்போல வாடினாள். ‘‘வள்ளி முதலறிந் தற்று’’ (திருக். 1304.) விரகமுற்ற மகளிரை இரவு வருத்தும். இருள், மன்மதனுக்கு யானை என்ப. பழிவரும் என்றசொற் பழுது றாவகை உழைவிழிக் கிறந்துபா டொழிப்ப வல்விரைந் தெழுபவன் போல்இருள் கிழித்து வெய்யவன் சுழிபுனற் கருங்கடல் முகட்டுத் தோன்றினான். 26 | ‘பழிவரும்’ என்ற திருவாக்குப் பிழைபடாதபடியும் மான்போலும் விழியினையுடையாளுக்கு வரும் சாக்காட்டைத் தவிர்ப்பவும், மிக விரைந்து எழுவோன்போல இருளைப் பிளந்துகொண்டு சூரியன் கடல் முகட்டி லெழுந்தான். அறுசீரடி யாசிரிய விருத்தம் அத்திறங் கேட்ட தோழி ஆய்ந்துருப் படத்தில் தீட்டி இத்தனிக் குமர னேயோ என்றுள மகிழ்ச்சி நோக்கித் தத்துநீர்த் துவரை நண்ணித் தவிசொடுந் துயில்கின் றானைச் சித்திர மெனக்கொண் டெய்தித் திருந்திழை முன்னர் உய்த்தாள். 27 | கனவிடைத் தோன்றியோன் உறுப்பு நலங்கள் கேட்டறிந்த தோழி வடிவினைப் படத்தில் ஆராய்ந்து எழுதிக் கனவிடை வந்தோன் வடிவு கண்டு மகிழ்ந்தவழி ‘இவ்வொப்பற்ற அரசிளங்குமரனோ’? எனத் தவழ்கின்ற நீர்சூழ் துவாரகையை நண்ணித் துயில்வோனைக் கட்டிலொடும் சித்திர மொப்பக் கொணர்ந்து உஷையிடம் சேர்த்தனள். அரசிளங்குமரர் பலரைத் தீட்டிக் காட்டினமை ஆய்ந்து எனவும் ‘இத்தனிக்குமரனேயோ’ எனவும் வருதலான் அறிக. கண்டனள் அசுரன் ஈன்ற கனங்குழை அமிழ்தம் அள்ளி உண்டனள் என்ன ஓகை துளும்பினள் உவனைப் புல்லிக் கொண்டனள் காளை மேனி வனப்பெலாங் குறித்து நோக்கி விண்டனள் கவலை அன்னான் விழித்தனன் விளைந்த காமம். 28 | கனங்குழையாள் காளையைக் கண்டனள்; அமிழ்தத்தைத் தவத்தால் பெற்று உண்டவள் ஒப்ப உவகை பொங்கித் ததும்பினள்; அவனை இறுகத் தழீஇக் கொண்டனள்; உறுப்பழகையும் திரண்ட அழகையும் கண்களால் முகந்துண்டு துன்பமுற்றும் நீங்கினள்; அந்நிலையில் கண்விழித்தனன் அவன். இருவர்க்கும் காமப்பைங் கூழ் விளைந்தன. இளமுலை வருடி மோந்து முத்தம்உண் டிதழ்த்தேன் மாந்தி விளரிவண் டிமிருந் தாரான் மேகலை நெகிழ்த்து நீவித் தளைவிடுத் தகல யாணர் அல்குலந் தடத்துள் மூழ்கி விளைபெருங் கலவிப் போக வெள்ளத்தின் அழுந்தி னானால். 29 | |