கீழ்வீழ்ந்து சோர்கின்ற பொற்கொடிக்குத் துணைபோல விண்ணில் உராய்ந்து திரண்டுயர்ந்த கொடியும் சூறாவளி மோதமுரிந்து வீழ்ந்தது; வாணன் கொண்ட சிறந்த தவப்பயனும் உடன்வீழ்ந்தது; நாரத முனிவர் நிகழ்ந்ததை உணர்ந்தனர். சிலைத்தொழில் மாண்ட தன்சேய் சிறுவனைக் காணா தெங்கும் இலைப்புரை கிளைத்து வாடுந் துவாரகைக் கிறைபால் எய்திப் புலப்படப் புகலக் கேட்டுப் பொருபடை எழுக என்னா உலப்புயத் துளவத் தாரான் ஒலிமுர சறைவித் தானால். 34 | வில் வித்தையில் மாட்சிமைப்பட்ட மகன் மகனைக் காணாது யாண்டுந் தேடி வருந்தும் கண்ணனை அடுத்துத் தெளிய உணர்த்தக் கேட்டுத் திரண்ட கல்லொக்கும் தோளிற் றுளவ மாலையன் ‘பொரற்குரிய படை எழுக’ என்று போர்ப்பறை அறைவித்தனன். இலைப்புரை கிளைத்தல்: சிறிதும் இடம்விடாது தேடுதல்; ‘இலைப்புரை தடவியே’ (கலிங். 461.) ‘இலைப்புரைக் கிளைத்திட்டோமே’ (சீவக. 1741) ‘இலைப்புரை கிளைத்து’ (தணிக. நார. 10.) வியவரின் உணர்ந்தார் சாற்றும் விசிமுர சோதை கேட்டுச் செயிர் அறத் தொகுவ அங்கண் சேனையே அல்ல மாறாச் சயமுடை இமையோர் தங்கள் சிதறுநல் வினைகள் தாமும் உயர்முர சோதை கேட்டவ் வும்பர்பால் தொகுவ மாதோ. 35 | ஏவலரால் உணர்ந்து முரசறைவோர் பறையறைந்துணர்த்தக் கேட்டுக் குற்றமறத் தொகுவன இங்குப் படை; நீங்காத வெற்றியுடைய தேவர் தம்முடைய பரவிக் கிடந்த நல்வினைகளும் அவர்பால் திரள்வன. அசுரன் வீழ்வு சுரர் வாழ்வாகலின் இங்ஙனம் கூறினர். கடுந்தொழில் அசுரர் தம்மால் தெறப்படுங் கால தூதர் கெடுந்தொழில் அனையார்ப் பற்றக் கிளர்ந்துவேற் றுருவு கொண்டு கொடுந் தொழில் முற்றக் கற்றா லனையகூர்ங் கோட்டு நால்வாய் அடுந்தொழில் தறுகண் வேழம் அளப்பில பண்ணி னார்கள். 36 | கொலைத் தொழிலையுடைய அவுணரால் அழிக்கப்படும் யமதூதர் கெடற்குரியவரைக் கைப்பற்ற எழுச்சியுற்று வேற்றுவடிவங் கொண்டு அக்கொலைத் தொழிலை முற்றவும் கற்றாலனைய கூரிய கொம்புகளையும், தொங்குகின்ற வாயினையும், கொலையையும், வன்கண்மையையும், உடைய களிறுகள் எண்ணிலவற்றைப் போர்க் கோலம் செய்தனர். குவைமணி மோலி விண்ணோர் மனமெலாங் குழுமி நம்மைக் கவலுற வருத்தி னாரை வெலற்கிது காலம் என்னா அவயவங் கொண்டு வெவ்வே றணைந்தென விரைசெல் காட்சி இவறுசீர்க் கலினப் பாய்மா எண்ணில பண்ணி னாரால். 37 | |