வாணேசப் படலம் 419


     மணிக்குவியலைப் பதித்த முடியுடை விண்ணோர் மனங்கள் எல்லாம்
கூடித் தம்மை வருத்தினவரை வெல்லுதற்குரிய காலம் ஈதென்று மதித்து
வடிவுகொண்டு வேறு வேறாக வந்தால் ஒப்ப விரைந்து செல்லும்
தோற்றமுடைய விரும்புஞ் சிறப்புடைய கடிவாளம் பூட்டிய குதிரைகள்
எண்ணில அமைத்தனர்.

     ‘உள்ளம்போல உற்றுழியுதவும் புள்ளியற்கலிமா’ (தொல். கற்பு.)
ஆகலின் தேவர்மனம் கூறப்பெற்றது.

வரைமகள் கிரீசன் ஓங்கற் குறிஞ்சிமன் மதக்கை வெற்பென்
றுரைபெறு கிழமை யோரை ஒருங்குதன் வாய்தல் வைத்த
புரையினான் றன்மேற் சீறி வரையெலாம் புறப்பட் டாங்கு
விரைசெலற் கொடிஞ்சித் திண்தேர் பண்ணினர் கோடி மேலும்.  38

     மலைமகள், கைலை மலைப்பிரான், குறிஞ்சி மலைத் தலைவனாகிய
முருகப்பெருமான், மதமலை கைம்மலை எனப்பெறும் விநாயகப்பிரான் என்று
மலையொடு தொடர்பு படுத்திப் பேசப்பெறும் உரிமையோரை ஒருசேரத்தன்
வாய்தலில் நிறுவிய கீழோன்மேற் சினங்கொண்டு மலைகள் யாவும்
புறப்படுவனபோல விரைந்த செலவினையுடைய தேர்களை ஆயத்தம்
செய்தனர்.

தடமதில் எரியாற் கோலப் பெற்றவன் தன்னை ஏவ
லிடவரம் பெறவும் வல்லும் எனத்துணிந் தனையான் ஆவி
கொடுசெலக் குறித்துப் பல்வே றுருவுகொண் டணைந்த காட்சி
வடவைநேர் சீற்றத் துப்பின் மள்ளரும் மொய்த்தார் பல்லோர்.  39

     நெருப்பால் மதிலமைத்த வாணன் தன்னையும் ஏவல் கொள்ள வரம்
பெறவும் வல்லமை கூடும் என எண்ணி அது கூடுமுன்பே அவன் உயிரைக்
கொண்டுபோகக் கருதி வடவானலம் பல்கோடி வடிவு கொண்டாற்போன்ற
இயல்பினையுடைய அவ்வடவைத் தீயை ஒக்கும் சீற்றமுடைய வலி அமைந்த
வீரரும் பலர் திரண்டனர்.

பண்ணுநாற் படையின் வீக்கம் பார்த்துமண் நடுங்கா வண்ணம்
வண்ணவெண் கவிகை பிச்சங் கொடிகள்மேல் மறைப்பத் தீம்பால்
வெண்ணிறப் புணரி நள்ளு மேயதன் தோற்றங் காட்டிக்
கண்ணனுந் தானை நாப்பண் கடகளி றுகைத்துச் சென்றான்.   40

     போர்க்கோலம் பூண்ட நால்வகைப் படைப்பெருக்கும் நோக்கி
மண்ணவர் நடுங்காதபடி வெண்கொற்றக்குடை, பீலிக்குடை, கொடிகள் இவை
சூழ்ந்து மறைக்க, இனிப் பாற்கடல் நடுவண் அறிதுயில் மேவிய காட்சியைப்
புலப்படுத்திக் கண்ணபிரானுஞ் சேனை நடுவில் மதத்தையுடைய களிற்றினை
ஊர்ந்து சென்றனர்.

கொழுநன்ஆ டமர்க்குச் செல்லக் குலமனை யகத்து வாளாக்
கெழுவுறு தகைய ஞாலக் கிழத்தியுந் திருவை குந்தப்
பழமலை இயற்கை வல்லை பார்த்தனள் மீள விண்மேல்
எழுவது கடுக்கும் சேனைச் செலவிடை எழுந்த தூளி.      41