கரையில் நெருங்கிய தண்ணிய மலர்களைக்கொண்ட காஞ்சிமரங்கள் தமது கிளைகளாகிய கைகளை நீட்டி வாசமிக்க கரும்புகளைத் தடவுங் காட்சி, மலர்விரிந்த மாலைகளில் வண்டுகள் ஒலித்துப் பறந்தெழும், திண்ணிய தோள்களையுடைய தம்கணவரொடு புலக்கும் பெண்களொடு மன்மதன் போர் செய்ய அம்புகளை வரிசைப்படுத்தி வில்லையேந்தும் இயல்பினையொக்கும் மேதகு செவ்வணி தாங்கினர் செல்லுமின் அன்னாருந் தீதற வெள்ளணி பூண்டுசெல் சேடிய ரானோரும் போதலு மீள்தலு மாய்ப்பொலி வீதிகள் எங்கெங்கும் காதல்செய் சேரி மடந்தையர் உள்ளங் கவல்விக்கும். 117 | மேன்மை தங்கிய செவ்வணி தாங்கிச் செல்லும் மின்னலையொத்த தோழிப் பெண்களும், குற்றமற்ற வெள்ளணி பூண்டு செல்லும் பாங்கிமார்களும், எவ்விடத்தும் போதலும், மீண்டு வருதலுமாக விளங்கும் வீதிகள், கண்டோர் விரும்பும் சேரியிலுள்ள பரத்தையருடைய மனத்தைக் கவலுறச்செய்யும். தலைவி பூப்புற்றமையைத் தலைவற் குணர்த்தச் சேடியர், செம்மலரும், செம்பட்டும், செஞ்சாந்தும், செவ்வணியும் தாங்கிப் பரத்தையர் சேரிக்குச் சென்று மீள்வர். தலைவி மகப்பயந்து நெய்யாடினமையைத் தலைவற் குணர்த்தச் சேடியர் வெண்மலரும், வெண்பட்டும், வெண் சாந்தும், வெள்ளணியுமணிந்து பரத்தையர் சேரிக்குச்சென்று திரும்புவர். தசும்புறழ் கொங்கையொ டெம்பெரு மான்மகிழ் தண்பாசூர் விசும்பை உரிஞ்சு மதிற்றிரு வல்லம் விரைச்செந்தேன் அசும்பு தடம்பொழில் ஏனைய வைப்பும் அனந்தஞ்சூழ் பசும்பணை மாமரு தத்தொழில் யார்பகர் கிற்பாரே. 118 | குடத்தை ஒத்த தனத்தையுடைய இறைவியொடும் எமது முதல்வன் அமரும் தண்ணிய திருப்பாசூரும், ஆகாயத்தைத் தடவுகின்ற மதில் சூழுந் திருவல்லமும், வாசம் அமைந்த செந்தேன் ஊறும் பரந்த சோலை சூழ்ந்த பிறதலங்களும் அளவிலவாய்ச் சூழ்ந்த பசிய வயலால் திருத்தங்கு மருத நிலத்தின் பொலிவை எடுத்துச் சொல்லும் வன்மையை யுடையர் யாவர். பகர்கிற்பார்; கில், ஆற்றலுணர்த்துவதோர் இடைச்சொல். நெய்தல் கலிவிருத்தம் அம்மருத வைப்பினை அடுத்தகழி நெய்தல் மம்மர்விட வாலம்அர னுக்குதவு மாற்றால் நம்மின மெனப்பொய்ம்மொழி நாடியுரை கைதை சும்மைய அளக்கரொடு சூழ்ந்துறவு கொள்ளும். 119 | |