420காஞ்சிப் புராணம்


     கணவன் வெற்றிகொள் போர்க்குச் செல்லக் கற்புடைய மனைவி
வீட்டின்கண் வறிதே அமைகின்ற தகைமையை ஒப்பப் பூதேவியும்
திருவைகுந்தம் என்னும் பழைய மனையின் இயல்பைப் பார்த்துப் பின்
மீளுதற்பொருட்டு விண்மிசை எழுவதனை ஒக்கும் படைச் செலவில்
எழுந்தன துகள்.

கண்ணன் படையும் வாணன் படையும் கைகலத்தல்

இன்னணம் அளக்கர் ஏழும் எழுந்தெனப் பரந்த சேனை
துன்னலர் அணுகல் செல்லாச் சோணித புரத்தை முற்ற
அன்னது தெரிந்த வாணன் அழலெழ விழித்து நக்குத்
தன்னிகர் அடுபோர்ச் சேனைத் தலைவரை ஏவி னானால்.  42

     இவ்வாறு எழுகடலும் கரைகடந்ததெனப் பரவிய சேனை பகைவர்
நெருங்குதற்கரிய சோணிதபுரத்தை வளைந்து சூழஅதனை உணர்ந்த
வாணன கண்கள் தீயெழ நோக்கி அழிக்கின்ற போரைச் செய்கின்ற
சேனாதிபதிகளை ஏவினான்.

எழுந்தன படைகள் நான்கும் இயம்பின இயங்கள் எங்கும்
வழிந்தன விலாழி மண்ணும் வானமுஞ் செறியத் துன்னி
ஒழுங்கின தூளி சேய்த்திற் கண்டவர் உகுமண் மாரி
பொழிந்திடும் போலும் வாணன் புரத்தென மருட்கை கொள்ள.  43

     வாணனுடைய நால்வகைப் படைகளும், எழுந்தன. எவ்விடத்தும்
இயங்கள் கலித்தன. குதிரை யானைகளின் வாய்நீர் வழிந்தன. மண்ணிடமும்
விண்ணிடமும் செறியத் துகள் தொடர்ந்து, தூரத்திற்கண்டோர் சிந்துகின்ற
மண்மழை பொழிந்திடும்போலும் என்று திகைப்புற நிரல்பட்டன.

     ஒழுங்குபடல் துகள் மழைத்தாரைபோல் கால்கொள்ளல். பயனிலைகள்
முன்னின்றுணர்ச்சியூட்டுகின்றன.

தன்னுயிர்க் கணவன் மேற்செஃ றானையுள் ளழுங்கக் கண்கள்
பொன்னுருப் புவனி மாது புழுதியாற் புதைப்பச் சீறி
அன்னவள் மருமம் நோவ அடிபெயர்த் ததிர்த்துச் சென்று
மின்னிலைப் படைய சேனை வியனகர் வெளிக்கொண் டன்றே.  44

     தன்னுயிர்க் கணவராகிய கண்ணபிரான் மேற் செல்லுகின்ற வாணன்
சேனையின் கண்கள் உள்ளழுந்த அழகிய வடிவுடைப் பூமிதேவி புழுதியாற்
பொதிய, அது கண்டு சினங்கொண்டு அப்பூமிதேவியின் மார்பு வருந்தும்படி
அடியிட்டுப் பெயர்த்து ஆரவாரித்துச் சென்று ஒளியும் இலைவடிவும்
உடைய படைகளைக் கொண்ட சேனை அகன்ற சோணித புரத்தினின்றும்
வெளிக்கொண்டது.

     வியல் நகர்: ‘வியலென் கிளவி அகலப் பொருட்டே’’ (தொல். சொல்.
உரி. 68) வியன்நகர் எனினும் ஆம்.