வாணேசப் படலம் 421


விதிர்படை மின்னுக் காட்ட விலாழிநீர் தாரை காட்ட
அதிர்ஒலி உருமுக் காட்ட அந்தநாள் படலை மேகம்
எதிர்எதிர் உடன்றா லென்ன இருபெருங் கருவிச் சேனை
கதிர்முலைச் சயமான் மெச்சக் கைகலந் தமரின் மூண்ட.  45

     புடைபெயர் படைக்கலங்கள் மின்னொளி வீசவும், யானை குதிரைகளின்
வாய்நீர் மழைத்தாரையை உணர்த்தவும், முழங்கொலி திரண்டு இடியொலியை
உணர்த்தவும் பிரளயகாலத்தில் தொக்கும் பரவியும் வருமேகங்கள் எதிர்
எதிராகப் போர் செய்தாற்போல இருதிறத்துப் பெருங் கூட்டமாகிய
சேனைகளும் கதிர்த்த கொங்கையினையுடைய விசயலட்சுமி பாராட்டக்
கைகலந்து போரில் முயன்றன.

     மூளுதல் தீப்போல முடுகுதல்.

கலிநிலைத் துறை

செங்க ளத்துடல் கிடப்பவரு திண்டி றலரை
அங்கு நின்றெதிர் கொளப்புகுநர் ஒப்ப அழல்சால்
வெங்க ளத்துறு செருத்திறமை நோக்க வியல்வான்
எங்கும் மொய்த்தனர்கள் ஈர்ந்தொடையல் மோலி இமையோர்.  46

     இரத்தத்தால் சிவந்த போர்க்களத்தில் உடம்பு கிடக்கத் தேவ
உடம்புடன் வீரசுவர்க்கம் புகுகின்ற மிக்க வன்மையரை அவண் நின்று
எதிர்கொள்ள முயல்வோரைப் போல நெருப்பொக்கும் கொடிய களத்திடை
வெளிப்படுகின்ற போர் நுட்பங்களைக் காண அகன்ற வானில் எவ்விடத்தும்
தேனால் ஈரிய மாலையை அணிந்த முடியுடைய இமையாத நாட்டத்தவர்
செறிந்தனர்.

கல்லி யற்பொரு களத்திருவர் அங்க மதனில்
மெல்லி யற்சய மடக்கொடி நடிப்ப மிடையும்
பல்லி யத்தொகை முழக்கென எழுப்பு படகம்
சல்லி தக்கைமுதல் எண்ணில தழங்கு வனவால்.   47

     திரண்ட கல்லின் தன்மைகொண்ட தோளுடைய கண்ணபிரானார்,
வாணன் என்னும் இருவர் தம் சேனைக்குழாத்தில் மெல்லியலாகிய
விசயலட்சுமி கூத்தாட அதற்கு முழக்குதல்போலப் படகம் சல்லி, தக்கை
முதலான வாச்சியங்கள் அளவில முழங்குவன.

     கண்ணபிரானார் வாணன் இருவர் உலம்போலும் தோள்களில் விந்தை
மகள் தாண்டவமாட எனினும் ஒக்கும்.

பொருதொ ழில்திறனில் வல்லபக வன்பு ரம்அடும்
ஒருவ னேஎனல் உணர்ந்தனர் எனச்சி வன்முடிச்
செருகு தும்பையை மிலைச்சினர் தெழித்து மிடலான்
இருதி றத்தரும் உடற்றுசமர் யாவர் மொழிவார்.    48