422காஞ்சிப் புராணம்


     போர்த் தொழில் வகையில் வல்ல பகவன் முப்புரங்களை நீறாக்கும்
ஒருவனேயாதலை உணர்ந்தார் போலச் சிவபிரான் திருமுடியில் மிலைச்சு
கின்ற தும்பை மாலையைச் சூடினராய் இருசார்பினரும் வன்மையொடும்
வருந்துகின்ற போர்புரிதலை யாவரே உள்ளவாறு கூற வல்லவர்.

கரிகள் ஊருந ரொடுங்கரிகள் ஊரு நர்களும்
புரவி ஊருந ரொடும்புரவி ஊரு நர்களும்
இரதம் ஊருநர்க ளோடிரதம் ஊருநர்களும்
மரபின் மன்னரொடு மன்னரும் எதிர்ந்து பொருவார்.    49

     யானைப்படைஞரொடு யானைப் படைஞரும், குதிரை வீரரொடு
குதிரை வீரரும் தேர் மறவரொடு தேர்மறவரும், விதிவழி அரசரோடரசரும்
எதிரிட்டுப் போர் செய்வர்.

     மரபின் என்பதனை மற்றையோர் மூவர்க்கும் கூட்டுக.

தண்ட மென்பெயர் வழிக்குதவு தான வயவே
தண்டம் ஓச்சியெறி தண்டமவை ஒன்ன லர்கள்கைத்
தண்ட மோடுபுய தண்டமும் நிலத்தின் உருளத்
தண்டம் ஆற்றுவ சமர்க்கண் இனம் என்ப துளதோ.   50

     தண்டம் என்னும் பெயரை வழிக்கு உதவுகின்ற மதநீரும், வலிமையும்
உடைய (யானை) மலைகள் வீசியெறிந்த தண்டாயுதங்கள் பகைவர்களுடைய
கையிலுள்ள தண்டாயுதங்களுடன் யானைத்துதிக்கையும் நிலத்திற் புரளும்
படி தண்டனை இயற்றுவன. போர்க்களத்தில் தம் இனம் என்ற
உணர்ச்சியுண்டோ?

     களிற்றினைக் களிறு அழித்தமையின் ‘படுகளத் தொப்பாரியோ?’
என்னும் பழமொழியைக் கொள்க. தண்டம்-யானை செல்லும் வழி.

ஏறு தேர்வயவர் ஏற்றெதிர் விடுத்த திகிரி
மாறு தேரிடை நுழைந்திடுவ வானெ ழுவரைக்
கூறு கொண்டமுழை நின்றெழு குலப்ப றவைகள்
வேறு குன்றமுழை யிற்குடிபு கல்வி ழையவே.       51

     தேரேறிய வீரர் எதிரேற்று விடுத்த சக்கரங்கள் பகைவர் தேரிடை
நுழைந்திடுங்காட்சி வானை நோக்கி எழுகின்ற மலையின் சார்பு கொண்ட
குகையினின்றெழு கூட்டமாகிய பறவைகள் பிற குன்றுகளின் குகைகளிற்
குடிபுகுதலை ஒப்பன.

கலி விருத்தம்

ஆடுபரி சாரிகை தொடங்குதொ றடங்கார்
சேடுடை முடித்தலைகள் வீழ்ந்துதமர் தேரின்
ஓடுருள் தடுப்பஒரு நீயிரும் எமைப்போல்
ஈடழிய ஏகலிர் எனத்தடைசெய் தென்ன.         52