வாணேசப் படலம் 423


     தாளகதிக்கேற்ப நடையிடுகின்ற குதிரைகள் வட்டமாயோடத்
தொடங்குதொறும் பகைவர் பெருமை பொருந்திய முடியுடைத்தலைகள் தம்
சார்பினோர் தேரின் மருங்கில் வீழ்ந்து ஓடுகின்ற சக்கரங்களை ஒப்பற்ற
நீவிரும் எம்மைப்போலழிய ஏகன்மின் எனத் தடைசெய்தாற் போலத்
தடுத்தன.

வண்டுமுரல் வாவியுறை கஞ்சமனை யாளைக்
கொண்டுதன் இருக்கைசெல் சுடர்க்கொழுநன் ஒப்பத்
திண்டிறல் அடங்கலர் சிரந்திருகி ஏந்தி
அண்டவெளி யிற்சுழல்வ சுற்றிவிடும் ஆழி.       53

     வண்டுகள் ஒலிக்கின்ற நீர் நிலையில் உள்ள தாமரையாகிய
மனைக்கிழத்தியைத் தன் மனைக்குக்கொண்டு செல்கின்ற சூரியனாகிய
கணவனைப்போல மிக்க வலியுடைய பகைவருடைய தலைகளைத் திருகிச்
சுமந்து வான வெளியில் சுழல்வன சுற்றி விசிய சக்கரங்கள்.

மீச்செல்வய வெங்கரிகள் ஒன்றன்மிசை ஒன்றங்
கோச்சுகதை மாற்றுகதை ஒள்ளிழை மடச்செவ்
வாய்ச்சியர்கோ லாட்டநிகர் வண்மையினை நோக்கி
ஏச்சறு விசும்பின் இமை யாதவர் வியப்பார்.      54

     ஒன்றனை ஒன்று முந்துகின்ற கொடிய களிறுகள் ஒன்றன்மே லொன்
றெறிகின்ற கதாயுதங்கள் அவற்றைத் தடுக்க எறிகின்ற கதைகள் ஒள்ளிய
அணிகளையும் மென்மையினையும் உடைய சிவந்த வாயையுடைய மகளிர்
கோலாட்டம் ஒக்கும் வளத்தை நோக்கிப் பழிப்பற்ற விண்ணோர்
அதிசயமுறுவர்.

விழித்தவெகு ளிக்கண்இடன் ஆடுதொறும் மேவார்
அழித்திமை யெனக்கருதி ஆர்ப்பர்என வெள்கி
ஒழித்துவலன் நோக்கின்அழல் சீற்றம்நனி காட்டித்
தெழித்துவிறல் சாற்றிஅமர் ஏற்பர்திதி பெற்றார்.    55

     பகைவரை வெகுண்டு நோக்கிய கண்களுள் இடக்கண் இமைக்கும்
தோறும் பகைவர் வெகுளி நோக்கை அழித்து அச்சத்தால் இமைத்தனர்
என எண்ணி ஆரவாரித்து மகிழ்வர் என்று அவுணர் சோனை நாணி
வலக்கண்ணில் சினத்தீயை மிகுதியும் தோற்றுவித்து உறுமி வல்லமை
பேசித் திதியின் மைந்தராகிய அசுரர் போர்மேற்கொள்வர்.

     இமைப்பின் அவர்மேல் வாளிதொடார்; “இமைத்திட்ட தழல்விழிக்கு”
வேலி முருகப்பிரான்” (முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்) ‘விழித்த கண்’
(திருக். 775.) இடக்கண் இமைத்தல் தீ நிமித்தத்தான் ஆயது.