424காஞ்சிப் புராணம்


வேறு

வெங்கட்கரி கடிந்திட விண்ணத்தெழும் அவுணர்
அங்கைப்பிடி எஃகத்துடன் அணைகின்றமை காணா
நங்கட்கிடர் புரிவான்இவன் நணுகுற்றனர் என்னா
உங்கட்செறி விண்ணோர்இரி வுற்றார்உளம் அஞ்சி.   56

     தறுகண்மையுடைய யானைகளால் எறியப்பட்டு விண்ணிலெழும்
அசுரர் உள்ளங்கையிற் பற்றிய வேலுடன் அணைதலைக் கண்டு வானில்
நெருங்கியுள்ள தேவர் தங்களுக்குத் துன்பம் தரும் பொருட்டு இங்கு
நெருங்கினர் என்றுட்கொண்டு மனம் நடுங்கி வெருண்டோடினர்.

தெவ்வட்டழல் படைவெய்யவர் விண்ணிற்செல உந்தும்
கௌவைக்கரி பிளிறிக்கடம் ஒழுகப்புவி வீழ்வ
எவ்வப்பட வலனைத்தெறும் இறைஏவலின் எழிலி
வெவ்விற்படை மாயற்கொரு துணையாய்வரல் வீழும்.   57

     பகைவரை அழித்துச் சீறுகின்ற படையையுடைய அசுரரால் வானிற்
செல்லும்படி தூக்கி எறியப்பட்ட துன்பம் உடைய யானை பிளிறொலியுடன்
மதநீரொழுகப் பூமியில் வீழ்தல், துன்பப்பட வலன் என்னும் அசுரனை
அழித்த இந்திரன் கட்டளையால் மேகம் சார்ங்கம் என்னும் வில்லையுடைய
திருமாலுக்குத் துணையாய் வருதலை ஒக்கும்.

ஒருவன்திறல் அவுணன்கத முடன்ஊக்கிய பரிமா
பெருவிண்மிசை எய்திச்சுழல் காற்பட்டுழல் பெற்றி
வருவெங்கதிர் மான்தேர்விசை யிற்றப்பிய வாசி
தெருமந்தினங் காணாதவண் உழிதந்தெனத் திகழும்.   58

     வலியுடைய அசுரனொருவன் கோபத்துடன் தூக்கி எறிந்த குதிரை
வானில் எய்திச் சுழலுகின்ற காற்றில் அகப்பட்டுச் சுழலுந் தோற்றம், சூரியன்
செல்லும் விசையினால் வழி விலகிய ஓர் குதிரை மனம் நொந்து
தன்னினத்தைக் காணாது சுற்றித் தேடுதலை ஒக்கும்.

வேறு

துன்னுகுரு தித்தசை வழுக்கிவிழு சூரர்
வெந்நிடை மதக்களிறு குத்துவெண்ம ருப்பு
முன்னுற உரீஇநிமிர்வ மைந்தர்முலை பெற்ற
தென்னென அரம்பையர் மருட்கையின் இசைப்பார்.  59

     தரையிடைத்துன்னிய இரத்தம், தசை இவற்றால் வழுக்கிவிழுகின்ற
வீரர் முதுகில் மதக்களிறு குத்திய வெண்கோடு உருவி வெளிப்பட்டு மார்பில்
நிமிர்ந்து தோன்றக் கண்ட தேவமகளிர் ஆடவர் கொங்கை பெற்ற தென்னே
என வியப்பொடும் பேசுவர்.