இவ்வாறு நெருங்கிப் போர் புரிகையில் பண் பாடுகின்ற வண்டுகள் உழக்குகின்ற மாலையைச் சூடிய வலிய அசுர வீரர் வலி குறைந்து மனம் தளர்ந்தனர்; அஞ்சினர்; ஊக்கம் குறைந்தனர்; சிதறுண்டனர்; பின் வாங்கினர்; இடம் விட்டகன்றனர்; நாற்றிசையிலும் ஓடினர். கொச்சகக் கலிப்பா கள்ளவிழும் மலர்வாவித் துவரைக்கோன் கடற்சேனை மள்ளர்படைக் கல்லெறியான் வல்லாண்மைக் குடம்உடைய உள்ளிருந்த ஞண்டுகளின் தனித்தனியே இரிந்தோடி நள்ளலான் பெருஞ்சேனை நகர்நோக்கி நடந்தனவால். 69 | தேனொடும் விரிகின்ற மலர்களையுடைய நீர் நிலைகளைக் கொண்ட துவாரகா புரிக்குத் தலைவராகிய கண்ணபிரானுடைய கடல் போலும் சேனை வீரர் தம் படைக்கலங்களாகிய கல்லாலெறிதலால் தாக்குண்டு வலிய ஆண்மையாகிய குடம். உடைந்து உள்ளிருந்த நண்டுகளைப் போலப் பல திசைகளிலும் பகைவனாகிய அசுரனுடைய பெருஞ்சேனை உடைந்தோடி நகரத்தை நோக்கி நடந்தன. கண்ணன் கணபதி முதலியோரை வழிபடல் போர்தாங்கும் மறவீரர் பின்முடுக்கிப் போதரலும் தார்தாங்கி முதல்வாய்தற் கடைமன்னு தவளமதிக் கூர்தாங்கும் ஒருகோட்டுக் குஞ்சரப்புத் தேள்காணூஉச் சூர்தாங்கி வருபடையைத் தொலைத்துழக்கிச் சவட்டினான். 70 | போரை மேற்கொள்ளும் அஞ்சாமையையுடைய வீரர் பின்னே துரத்திப் போதலும் மாலையைச் சூடி முதல் வாயிலில் எழுந்தருளியிருக்கும் வெள்ளிய மதியை ஒக்கும் கூரிய ஒற்றைக் கொம்பினையுடைய யானை முகப் பிரான் கண்டு அவுணன் சேனையை அச்சுறுத்தி வரும் படைஞரைக் குழப்பிக் கெடுத் தழித்தனர். கண்ணனும்மற் றினிஎன்னே செயல்என்று கடுகச்சென் றுண்ணமைந்த பாலடிசில் கனிவருக்கம் உறுசுவைய பண்ணியங்கள் எனைப்பலவும் அமுதுசெயப் படைத்திறைஞ்ச அண்ணல்வயப் பகட்டேந்தல் அத்தொழிலின் மகிழ்ந்திருந்தான். | கண்ணபிரானும் இனிச் செய்யத் தக்கது என்னே! என்றிரங்கி விரையப்போய் நிவேதனத்திற்குரிய பாலுணவும், பழ வகைகளும், மிகுசுவையுடைய மோதகங்களும், ஏனைய பலவும் அமுது கொள்ள நிவேதித்து வணங்கத் தலைமையும் வலிமையும் உடைய யானைமுகப் பிரான் அச்செயலில் ஈடுபாடுடையராயினார். இதுகண்டு மற்றிரண்டாங் கடைவைகும் இளந்தோன்றல் எதுமைந்தன் வருகென்று சிலைவாங்கி ஏற்றெழலும் மதுவொன்று மலர்த்துளவோன் பூசனையான் மகிழ்விப்ப அதுகண்டு மகிழ்ந்திருந்தான் ஆறுமுகப் பண்ணவனும். 72 | |