திருநாட்டுப்படலம் 43


     அம் மருத நிலத்தை அடுத்த கழி சூழ்ந்த நெய்தல் நிலமானது
மயக்கஞ்செய்யும் விடத்தைச் சிவபிரானுக்குத் தந்த தன்மையால்,
பொய்யுரையை ஆராய்ந்து கூறிய தாழைகள் தமது இனமென்று
ஆரவாரத்தையுடைய அக்கடலோடு ஆராய்ந்து நெருங்கி நட்புக்கொள்ளும்.

     ‘உணர்ச்சி நட்பாம் கிழமை தரும்’ ஆகலின் கூறினர். ‘கொலைக்கும்,
பொய்க்கும்’ அடுத்தடுத்த இடம் உண்டு. ‘ஒன்றாக நல்லது கொல்லாமை
மற்றதன், பின்சாரப் பொய்யாமை நன்று’ என்னும் திருக்குறளை நோக்குக.

கண்டல்மட லேறஅலர் தூற்றுகமழ் புன்னை
உண்டுநறை காலும்அளி ஒத்துடன் இசைக்கும்
வண்டுளர் அரும்புவிரி நெய்தல்மண மிசையுங்
குண்டுகழி மேய்பறவை நோக்கிமகிழ் கூரும்.     120

     தாழம்பூ விதழிற் பொருந்த நறுமணங் கமழும் புன்னை அலர்
சொரிவன, தேனுண்டு உமிழ் வண்டுகள் ஒருங்கு இசை கூட்டும். வண்டுகள்
முரன்று சுழலுதற்கு இடனாகிய அரும்புகள் அலர்கின்ற நெய்தல் மணம்
வீசும். ஆழ்ந்த கழியில் மேய் பறவைகள் கண்டு மகிழ்மீக் கூரும்.

     (வே-ள்) தாழை ‘மடலேறுவல்’ எனச்சேட்படுத்த தோழிக்குக் கூறவும்,
கூட்டம் அறிந்து புன்னை அலர் பரப்பவும், வண்டு தோழியாய் தலைவன்
கொண்டுடன் கழிதற்கு ஒத்தொழுகவும், தலைவி மீண்டு வந்துழி நெய்தல்
தம் இல்லில் மணநேரவும் இந்நிகழ்ச்சிகளை நோக்கி மகிழ்ச்சி மீக்கூரவும்
எனப்பொருளமைய இயற்றினர்.

கண்டுமொழி யார்அவய வத்தெழில் கவர்ந்து
தெண்டிரை அளக்கரின் ஒளித்தது தெளிந்து
கொண்டதுறை யோர்கடல் குளிப்பர்துகிர் சங்கம்
வண்டரளம் வாரிமட வாரெதிர் குவிப்பார்.       121

     கற்கண்டைப்போன்ற இனியமொழியினையுடைய நெய்தல்நில மகளிர்
தம் அவயவமாகிய அதரம், கழுத்து, பல் இவற்றின் அழகைக் கவர்ந்து
கடலிடை ஒளித்தமையைத் தெளிந்து நெய்தல் நிலத்தவர் கடலில் குளித்துப்
பவளமும், சங்கும், முத்தும் ஆகிய இவற்றை வாரி அம்மகளிர்முன் குவிப்பர்.

     கவர்ந்த திருடரைக் கைப்பற்றி உடைமையை இழந்தவர்முன் நிறுத்துதல்.

எம்முடை உறுப்பெழிலை வவ்வினிர்க ளென்னாக்
கொம்மைமுலை வம்பணி பரத்தியர் வெகுண்டு
விம்முவளை சேல்பவளம் வெண்டரளம் மற்றும்
அம்மபிறர் கொள்ளவிலை யாற்றிமகிழ் கூர்வார்.   122