நின்வரவு வாணனுக்கு முன்னரே நிகழ்த்தினம்யாம் அன்னவனை இனிநீவென் றடல்வாகை புனைகிற்பாய் மின்னிமைக்கும் மணிமார்ப விசையனொடு புரிவெம்போர் முன்னெமக்கு முருகவேள் விளையாட்டிற் சிறந்ததால். 87 | ‘நின் முற்றுகையை வாணனுக்கு முன்னரே யாம் கூறினோம். அவனை இப்பொழுது நீ வென்று வெற்றி மாலையைப் புனைவாய். ஒளிவிடும் கௌத்துவ மணியை அணிந்த மார்பினனே! அருச்சுனனொடு முன் புரிந்த கொடிய போர் எமக்கு முருகனோடும் விளையாடும் விளையாட்டினும் மிக்க விரும்பினது.’ மின்.இலக்குமி எனினும் ஆம். அம்முறையே கணப்பொழுது நின்னோடும் அமர்புரிகேம் இம்முறைகண் டுலகும்பர் மகிழ்வுறுக இதுவன்றித் தெம்மரபிற் செய்கில்லேம் அஞ்சாதி எனத்தேற்றிக் கைம்முகத்திற் பிடித்திருந்த கார்முகத்தை வணங்கினான். 88 | ‘அருச்சுனனொடு போர்புரிந் தாங்கு நொடிப்பொழுது நின்னுடன் போர் புரிவேம். இவ்விளையாட்டுப் போரினைக் கண்டு மண்ணோரும் விண்ணோரும் மகிழ்வுறுக. பகைத்தெழும் போராகக் கொள்ளேம். அஞ்சாதி’ எனத் தெளிவித்துத் திருக்கரத்தில் தாங்கியிருந்த வில்லை வளைத்தனர். உய்ந்தேன்எம் பெருமானே அருளாய்என் றுரைத்துரைத்து மந்தார மணங்கமழும் மலரடிகள் தொழுதிசைந்து பைந்தாம நறுந்துளவப் பண்ணவனும் பகைமுருக்குஞ் சிந்தாத விறற்சார்ங்கச் சிலைவாங்கி நாணெறிந்தான். 89 | பசிய துளவ மாலையோனும் ‘எமது பெருமானே! வாழ்ந்தேன் அருள் செய்யாய்’ என்று பலமுறை கூறி மந்தார மலர் மணங்கமழும் திருவடிகளைத் தொழுதிசைந்து பகைவரை அழிக்கின்ற கெடாத வெற்றியைத் தரும் சார்ங்கம்’ என்னும் வில்லை வளைத்து நாணெறிந்தான். கலிநிலைத் துறை பவள வெற்பொடு நீலவெற் பெதிர்ந்தெனப் பரூஉக்கைக் கவள மாக்களி றட்டவர் இருவருங் கடுகித் துவள வார்சிலை வாங்கினர் நாணெறி சும்மை திவள லுற்றமூ வுலகமுஞ் செவிடுறப் பொதிந்த. 90 | பவள மலையொடு நீலமலை பொருதல் போலப் பரிய துதிக்கையை யுடைய கவளங் கொள் மலைபோலும் களிற்றினை அழித்தவர் இருவரும், விரைந்து நீண்ட வில் குழைய வளைத்து நாணெறிதலால் எழுந்த முழக்கம் மெலிவுற்ற மூவுலகையும் செவிடுபடப் போர்த்தன. கயாசுரனைச் சிவபெருமானும், குவலயா பீடத்தைக் கிருட்டின மூர்த்தியும் அழித்தவராகலின் இருவருங் களிறட்டவர் என்றனர். மலையை ஒப்பவர் மலை போலும் யானையை அழித்தவர் எனப் போருக்கொரு புடை ஒப்புமை கூறினர். |