434காஞ்சிப் புராணம்


புட்டில் வீக்கிய கரத்திடைப் பொருசிலை குழையத்
தொட்ட வாளிகள் இறுதிநாள் முகிலெனச் சொரிவார்
அட்ட திக்கையும் அடைப்பர்கள் கணத்தவை மாற்றி
முட்ட வெங்கணை மீளவும் முடுக்குவர் தொலைப்பார்.   95

     உறை இட்ட கரத்தில் வில் வளையத் தொடுத்த அம்பு மழையைப்
பிரளய காலமேகம்; போலப் பொழிவார். எண்டிசை வெளியையும்
அடைப்பர்கள். நொடிப்பொழுதில் அவற்றை அழித்து மீளவும் தடைப்படக்
கொடுங்கணையை முடுக்குவர்; பின்பு தொலைப்பர்.

கடவுள் வான்படை எண்ணில வழங்குவர் கடுநோய்
படரும் வெப்பொடு குளிர்ப்பிணி படைத்தெதிர் விடுப்பார்
உடலும் மற்றவை ஒன்றின்ஒன் றழிவுறக் காண்பார்
அடைவின் இன்னணம் விளைத்தனர் அற்புதப் பூசல்.    96

     தெய்வப் பெரும் படைகள் அளவில்லன எறிவர்; கொடிய நோய்கள்
தொடரும் வெப்பம், குளிர் எனப்பெறும் பிணிகளைச் சிருட்டித்து எதிர்
விடுப்பார். மாறுபடுகின்ற அவைகளை ஒன்றால் ஒன்றை அழிவுறக்காண்பர்.
முறையாக இவ்வாறு அதிசயமான போரை விளைத்தனர்.

மூவ ருந்தொழும் முதல்வனே முனைந்தனன் இனிஎன்
ஆவ தோஎன முனிவரர் அஞ்சினர் அகில
தேவர் அஞ்சினர் பூதங்கள் அஞ்சின தேவர்
கோவும் அஞ்சினன் திருவுளக் குறிப்பிணை உணரார்.   97

     ‘மும்மூர்த்திகளுந் தொழும் முதல்வனே போரைத் தொடங்கினமையின்
இனி என் விளைவதோ’ என முனிவர்கள் வெருவினர்; தேவர் யாவரும்
அஞ்சினர்; பூதக்குழாங்கள் அஞ்சின; இந்திரனும் பயந்தனன். இறைவனார்
திருவுள்ளக் கருத்தை அறியாராகலின் யாவரும் பயந்தனர்.

     முதல்வனே வாணன் சார்பில் நிற்றலின் அசுரன் விளைக்கும்
துன்பங்கள் தமக்கு நீங்கா எனத் திருவுளக் குறிப்புணராராய் அஞ்சினர்.

இளிவில் வெஞ்சமர் இன்னணம் நெடும்பொழு தாற்றும்
அளவின் மற்றினி ஆற்றிலேன் அடியேனன் என்னா
முளரி நோக்கினான் வணங்கலும் முறுவல்செய் தடியார்க்
கெளியன் என்பது விளக்கினன் என்னைஆ ளுடையான்.   98

     இகழ்ச்சியில்லாத கடும்போரை இவ்வாறு நெடுங்காலம் புரியும்
எல்லையில் ‘அடியேன் இனிச்செய்யும் வலியில்லேன்’ என்று பதுமாக்கன்
வணங்கலும் புன் முறுவல் பூத்து அடியவர்க்கெளியன் என்பது புலப்பட
(சாய்ந்து) என்னை அடிமையாகவுடைய பெருமான் விளக்கினர்.

அடிகள் நோவச்சென் றாளென விறகுமண் சுமந்தும்
அடிபொ றுத்தும்ஓர் அரிவைதூ தாற்றியும் வெள்கா
தடியர் எண்ணமே முடிப்பது விரதமாக் கொண்ட
அடிகள் வாகைஇக் கண்ணனுக் களித்ததோர் வியப்போ.   99