திருவடிகள் வருந்தச் சென்று விறகு சுமந்தும் பாணபத்திரனுக்கடிமை எனக்கூறியும், வந்தியின் பொருட்டு மண் சுமந்தும், பாண்டியன் கைப்பிரம்படி ஏற்றும், பரவையார்பால் தூது சென்றும், நாணாது அடியர் மனக்கருத்தை முடிப்பதையே கொள்கையாகக் கொண்ட அடிகள் வெற்றி மாலையைக் கண்ணபிரானுக்குச் சூட்டியதும் ஓர் அதிசயமாமோ? தம்பி ரான்பெருங் கருணையின் சால்பினை நோக்கி உம்பர் ஆர்த்தனர் உவணஏற் றிறைவனும் ஆவா எம்பி ரான் அருள் என்னிடை இருந்தவா றென்னென் றம்பி காபதி அடிதொழு தானந்தம் உற்றான். 100 | எல்லா உயிர்களுக்கும் தலைவனாகிய சிவபிரான் பேரருட்டிறத்தினை நோக்கித் தேவர் மகிழ்ச்சியால் ஆரவாரித்தனர். கருடவாகன மூர்த்தியும் ‘ஆவா! எமது பெருமான் அருள் என்னிடையும் இருந்த வகை என்னே!’ என்று அம்பிகைக்கு நாயகன் திருவடி தொழுது பெருமகிழ்ச்சியுற்றனர். கண்ணனும் வாணனும் கைகலத்தல் துண்ட வெண்பிறைக் கண்ணியோன் போர்வினை துறப்பக் கண்டு வெஞ்சினந் தலைக்கொளீஇக் கனைகழல் அவுணன் அண்டம் விண்டென ஆர்த்தனன் மாயனை அடுத்தான் மண்டு தீச்சிலை வளைத்தனர் விளைத்தனர் பூசல். 101 | வெண் பிறையாகிய துண்டத்தினை முடிமாலை போலக் கொண்ட பெருமான் போரைக் கைவிட ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த அசுரன் அதனைக்கண்டு கொடுங்கோபந் தலைக்கொண்டு அண்டம் பிளந்ததென ஆரவாரித்தனன். கண்ணனை அடுத்தனன். இருவரும் கொடுமை மிக்க வில்லை வளைத்தனர்; போரைத் தொடங்கினர். நூழில் வன்படை இருவரும் நெடுமொழி நுவல்வார் பாழி வன்புயம் புடைத்தெழுஉ வஞ்சினம் பகர்வார் ஊழி ஈற்றனல் விழிஉகச் சீறுவர் உலகைப் பூழி யாக்குவர் சாரிகை சுற்றுவர் பொருவார். 102 | கொன்று குவித்தலையுடைய இருவரும் தத்தம் மேம்பாட்டுரையைக் கூறுவார். வலிமை மிகுந்த தோள்களைத் தட்டிக் கடுஞ்சபதம் கூறுவார். பிரளய காலாக்கினியைக் கண்களுமிழச் சினங் கொள்வர்; உலகைப் புழுதி படுத்துவர்; வட்டணையைாகச் சுற்றுவர்; போர் செய்வர். இனைய மண்டமர் ஞாட்பிடை எம்பிரான் அருள்சேர் வனைம லர்த்துழாய் வானவன் மதுகைமீக் கொண்டு முனைவ ரிச்சிலை வாளிதேர் முடிகளை இறுத்துத் தனிய னாக்கினன் சலம்புரி அவுணருக் கிறையை. 103 | |