அடிய னேன்பிழை யாவையும் பொறுத்தருள் ஐயனே எனத் தாழ்ந்து, கொடியின் மேல்விடை உயர்த்தவன் ஆணையிற் குடவளைக் குடங்கையான், மடிவில் வாணனைக் கேண்மைகொண்டாங்கவன் மகளைத்தன் மகன்ஈன்ற, விடலை சேர்வுற மணம்புணர்த் துடன் கொண்டு மீண்டனன் தன்மூதூர். 107 குடம்போன்ற பாஞ்ச சன்னியத்தை உள்ளங்கையிற் கொண்ட கண்ணபிரான் கொடிமேல் விடை எழுதி உயர்த்த பெருமானை அடியனேன் புரிந்த பிழைகள் முற்றவும் பொறுத்தருள் ஐயனே! என வணங்கி அப்பெருமான் ஏவலால் ஊக்கமுடைய வாணனை உறவு கொண்டவன் மகளாகிய உஷையைத் தன் பேரனாகிய அநிருத்தன் புணரத் திருமணம் புணர்த்து மணமக்களை உடன்கொண்டு துவாரகைக்கு மீண்டனன். வாணன் முத்தி பெறுதல் ஐயி ரண்டினில் உறழ்தரு மும்முறை அமரகத் துடைந்தெள்ளல், எய்தி னானெனப் பட்டவன் றனைக்கொண்டே இவன்செருக் கறக்கண்டான், செய்யச் செய்திடா தொழியவே றொன்றனைச் செய்யவும் வல்லோனாம், பைய ராஅணி பண்ணவன் பெருமையை யாவரே பகர்கிற்பார். 108 முப்பதுமுறை போரிற் புறங்காட்டிய இகழ்ச்சியை எய்திய கண்ணபிரானைக் கொண்டே வாணனின் செருக்கினை ஒழித்த படமுடைய பாம்பணிந்த பெருமானார் ஓர் செயலைச் செய்தலும், செய்யா தொழிதலும், வேறொன்று செய்தலும் வல்ல இறைமைக் குணங்களை உடையராவர், ஆதலின். அவரது பெருமையை யாவரே பகர வல்லார். கருவி மாமுகில் மேனியோன் அகன்றபின் கனங்குழை உமைபாகம், மருவு நாயகன் வாணனை நோக்கிநின் மணிப்புயக் கண்டூதி, ஒருவி னாய்கொலாம் எனக்குறு நகைமுகிழ்த் துரைத்தலும் முடிசாய்த்துப், பெரும மற்றினி வீடுபே றளித்திஎன் றிரந்தனன் நெருநேசன். 109 கண்ணபிரானார் துவாரகைக்குப் புறப்பட்ட பின்னர் கனவிய குழையினை யணிந்த உமையம்மையாரை யிடங்கொண்ட பெருமானார் வாணனை நோக்கி ‘நின்னுடைய அழகிய தோள்களின் தினவு தீர்ந்தனை போலும்’ எனப்புன்சிரிப் பரும்ப விளம்பலும் நாணத்தால் தலையைச் சாய்த்துப் பெருமானே! இனிமேல் வீடு பேற்றினை அளித்தி’ என்று குறையிரந்தனன் பேரன்பினனாகிய வாணன். முத்தி வேண்டுமேற் காஞ்சியின் எய்திநீ முன்எமை நிறீஇப் போற்றும், அத்த லத்திடைப் பெறுதிஎன் றருள்புரிந் தகன்றனன் எங்கோமான், பத்தி மேதகு வாணனுங் காஞ்சியிற் படர்ந்துதான் தொழுதேத்தும், நித்த னாரரு ளாற்கணத் தலைமை பெற் றானந்தம் நிலைபெற்றான். 110 |